26-வது வாரத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி தந்த சுப்ரீம் கோர்ட், மறுநாளே உத்தரவு நிறுத்தம் - ஏன்?

டெல்லியை சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ’எனக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது மூன்றாவதாக கர்ப்பமாகிவிட்டேன். என்னால் மூன்றாவது குழந்தையை வளர்க்க முடியாது. எனவே 26 வாரம் ஆகிவிட்ட கருவை கலைக்க அனுமதி கொடுக்கவேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் நாகரத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பெண்ணின் தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தின் அடிப்படையில், அப்பெண்ணின் கருவை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கலைக்க உத்தரவிட்டனர்.

’விரும்பாத குழந்தை பிறக்கும் பட்சத்தில் அதனை வளர்த்தெடுக்கும் பொறுப்பு மனுதாரருக்கு இருக்கிறது. ஆனால் மனுதாரர் குழந்தையை வளர்க்க தன்னால் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இத்தீர்ப்பு வழங்கியவுடன் மத்திய அரசு வழக்கறிஞர் ஐஸ்வர்யா அவசரமாக மறுநாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ’சம்பந்தப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கைக்கும், சுப்ரீம் கோர்டின் தீர்ப்புக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நேரத்தில் கருக்கலைப்பு செய்தால் அது சிசுவதையாகக் கருத்தப்படும். எனவே எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் இவ்விவகாரத்தில் மன அழுத்தத்தில் இருக்கின்றனர்’ என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கருக்கலைப்பு

அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்வதை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதோடு இது குறித்து புதிதாக விசாரிக்க வேறு ஓர் அமர்வை நியமிப்பதாகவும், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முறைப்படி மனுவுடன் வரும்படியும், அதுவரை கருக்கலைப்பை நிறுத்தி வைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது. இன்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பாலியல் வன்கொடுமை அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தை உடல் நலக்குறைவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் மட்டுமே 24 வாரங்களை கடந்த கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி கொடுக்கிறது.



from India News https://ift.tt/3z2YWN8

Post a Comment

0 Comments