விருதுநகர்: மாற்றுத்திறனாளி பேரனுடன் பரிதவித்த பாட்டி: வீடு ஒதுக்கி உதவி செய்த மாவட்ட ஆட்சியர்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவுக்குட்பட்ட, கீழத்திருத்தங்கலை சேர்ந்தவர் லதா. இவர், அந்தப் பகுதியில் வாடகை வீட்டில் தன்னுடைய மாற்றுத்திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய பேரனுடன் வசித்து வருகிறார். வாழ்வாதாரத்துக்கு வழியின்றி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்த லதா, பலக்கட்ட முயற்சிகளுக்கு பின்னர் தன் பேரனுக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை ஆணையை பெற்றிருக்கிறார்.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கென மாதம் கிடைக்கும் ரூ.1500 உதவித்தொகையை பெற்று, பிழைப்பு நடத்தி வந்ததாக தெரிகிறது. மேலும், முதுமை காரணமாக மனவளர்ச்சி குன்றிய அவருடைய பேரனை லதாவால் கவனிக்க முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது.

லதா மனு

இந்த நிலையில், தன் பேரனை சிறப்புப் பள்ளியில் சேர்க்கவும், வறுமையில் வாடும் தனக்கு அரசின் இலவச வீடு வழங்கி உதவிடுமாறும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம், லதா கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.

அதனடிப்படையில் கோரிக்கை மனுவினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிவகாசி தாலுகா, ஆணையூர் திட்டப்பகுதியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில், மனுதாரருக்கு உடனடியாக வீடுவழங்க உத்தரவிட்டார்.

லதா கோரிக்கை

இதைத்தொடரந்து, மனு அளித்த தினமே தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில், தரைத்தளத்தில் 'ஜெ' பிளாக்கில் 1-ம் நம்பர் வீடு லதாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மனுதாரரிடம் வீட்டுச்சாவி ஒப்படைக்கப்பட்டது. மேலும் மனவளர்ச்சி குன்றிய பேரனை சிறப்புப் பள்ளியில் சேர்க்கவும் உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.



from India News https://ift.tt/0kQeWiR

Post a Comment

0 Comments