அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் உத்தரவின்படி, கட்சி, சின்னம் உட்பட அதிகாரபூர்வ அங்கீகாரம் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வந்த பிறகும், தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை இன்னமும் ஓ.பி.எஸ்-ஸுக்கே ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கவேண்டும் என்று இதற்கு முன்பு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர்களில் அ.தி.மு.க-வினர், சபாநாயகருக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியபோதும், அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அப்போதுகூட, ``யாரை எங்கே அமரவைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்கவேண்டியது எனது உரிமைக்கு உட்பட்டது’’ என்று கூறிவிட்டார் சபாநாயகர் அப்பாவு. இத்தகைய சூழலில், தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி இரண்டு நாள்களாகக் காவிரி விவகாரம், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விகாரம் குறித்து அவையில் பேசிவந்த எடப்பாடி பழனிசாமி, இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது நாள் கூட்டத்தில் இருக்கை விவகாரம் பற்றி மீண்டும் கேள்வியெழுப்பினார்.
இது குறித்து அவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டனர். எனவே அவர்களைப் பதவிநீக்கம் செய்யவேண்டும். இது தொடர்பாக 10 முறை சபாநாயருக்குக் கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார்.
இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, ``ஒருவர் எந்த சின்னத்தில் வெற்றிபெற்று அவைக்கு வருகிறாரோ, அவரை அதே சின்னத்தில்தான் கடைசிவரை பார்ப்பேன். இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகர் உரிமைக்கு உட்பட்டது. அதனை எதிர்க்கட்சித் தலைவர் கேட்க முடியாது" என்று கூறினார். சபாநாயகரின் இத்தகைய பதிலால், அவையில் அ.தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு, அவைக் காவலர்களுக்கு, சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
பின்னர், அவைக் காவலர்கள் அ.தி.மு.க-வினரை வெளியேற்ற... அரசுக்கு எதிராகக் கோஷமிட்டபடி அவர்கள் வெளியேறினார். இதற்கிடையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்ற உத்தரவிட்டது பற்றி விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, ``இதனை நான் வீம்புக்காகச் செய்யவில்லை. இது என் உரிமை. சட்டப்படிதான் நான் நடக்கிறேன். யாருக்கும் சிறு மனக்குறைவு வரக் கூடாது என்றுதான் இந்த அவையை நடத்துகிறோம். எனவேதான், இடையூறு செய்த காரணத்தால் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டேன். இனியும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/r5i0xFn
0 Comments