காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசையும், தண்ணீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மெடிக்கல், ஹோட்டல் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
வணிகர்கள் இந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்காதது குறித்து விவசாயிகளை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் குமுற செய்திருக்கிறது. அதன் வெளிபாடே பந்த் போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
`இந்த போராட்டம் தொடக்கம் தான். அணைகளில் தண்ணீர் இருந்தும் கர்நாடக அரசு திறக்க மறுக்கிறது. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெறும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை’ என போராட்டக் குழுவினர் உறுதி காட்டுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜனிடம் பேசினோம், ``டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. கர்நாடக அரசு மாதம்தோறும் தர வேண்டிய தண்ணீரை தராததால் மேட்டூரில் தண்ணீர் குறைந்தது. இதனை தொடர்ந்து காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டாவில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கின.
இந்த நிலையில் டெல்டாவில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் குறுவை பயிர் சேதமடைந்திருப்பதாக தெரிவித்த விவசாயிகள் கவலையடைந்தனர். பயிர்கருகியதில் மனமுடைந்த நாகை விவசாயி தற்கொலை செய்து கொண்டார். குறுவை சாகுபடியில் விவசயிகள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் காவிரியில் தண்ணீர் இல்லாததால் தற்போது சம்பா சாகுபடியும் கேள்வி குறியாகியிருக்கிறது. குறுவையும் போச்சு, சம்பாவும் போச்சு என்பது விவசாயிகள் விம்மி வருகின்றனர்.
கர்நாடக அணைகளில் 80 சதவீத தண்ணீர் இருந்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு முறைப்படி தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. மேலும் அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா பின்பற்றவில்லை. டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் மாதமே சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் இல்லாததால் காவிரியை நம்பி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் இதுவரை நடவு பணியை மேற்கொள்ள முடியாமல் தவித்து நிற்கின்றனர். காவிரியில் தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் கர்நாடகா அரசையும், ஒன்றிய அரசையும் கண்டித்து டெல்டாவில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தி வருகிறோம்.
100 சதவீதம் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. வணிகர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். காவிரியில் தண்ணீர் வந்தால் மட்டுமே டெல்டா உயிரிப்புடன் இருக்கும். இல்லை என்றால் வறண்ட பூமியாக மாறிவிடும். இதில் தான் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதரம் அடங்கியிருக்கிறது. கர்நாடகா தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/bRGigWt
0 Comments