மத்திய அமைச்சர் நாராயண் ராணேவிற்கு மும்பை ஜுகுவில் 8 மாடிகள் கொண்ட பங்களா இருக்கிறது. இந்த பங்களாவில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு சந்தோஷ் என்பவர் மும்பை மாநகராட்சியில் புகார் செய்திருந்தார். அம்மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அம்மனு மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தொடங்கியது.
நாராயண் ராணே முன்பு சிவசேனாவில் இருந்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டு கடைசியாக பாஜகவுக்கு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நாராயண் ரானே இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதாக வந்திருக்கும் புகார் குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்பினர். அதன் அடிப்படையில் பிப்ரவரி 21-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் ராணே இல்லத்திற்கு சென்று சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 15-ம் தேதி சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை 15 நாள்களுக்குள் இடிக்கவேண்டும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகம் நாராயண் ராணேயிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதனை தொடர்ந்து அந்த பகுதியை சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி ராணே தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நாராயண் ராணே தரப்பில் மும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முடிவை மாற்றிக்கொண்ட மாநகராட்சி
நாராயண் ராணே தரப்பில் இரண்டாவது ஒரு மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் ராணேயின் இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்ததால் மாநகராட்சி தனது முடிவை மாற்றிக்கொண்டது. இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ராணேயின் மனுவை நீதிபதிகள் தனுகா, கமால் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
அதோடு ராணேயின் இல்லத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பகுதியை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். ராணேயின் கோரிக்கையை ஏற்று சட்டவிரோதமானதை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்தால் மற்றவர்களும் இது போன்ற தவறை செய்ய ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும், மும்பை முழுவதும் சட்டவிரோத கட்டுமானம் அதிகரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மும்பை மாநகராட்சி இவ்விவகாரத்தில் தனது முடிவை திடீரென மாற்றிக்கொண்டதை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். மாநகராட்சியின் செயல்பாடு தங்களுக்கு வியப்பூட்டும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், இரண்டு வாரத்தில் சட்டவிரோத பகுதியை இடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். அதோடு இக்கட்டடத்தை கட்டிய ராணேயின் குடும்பத்திற்கு சொந்தமான கால்கா ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கும்படி ராணே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கால அவகாசம் கொடுக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இது குறித்து ரானே மகன் நிதேஷ் ரானேயிடம் கேட்டதற்கு, நீதிமன்ற தீர்ப்பை இன்னும் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/0LVtIz6
0 Comments