வேட்புமனுவில் குளறுபடி? - அதிமுக முன்னாள் MLA சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 வரை சென்னை தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யா என்கிற சத்ய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை நடத்திவருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது, சத்யா தனது சொத்துமதிப்பைக் குறைத்துக் காட்டியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா

அந்த வழக்கின் விசாரணையில், சத்யா சட்டத்துக்குப் புறம்பாக தனது சொத்துக்கணக்கை மறைத்து தனது சொத்துமதிப்பை சுமார் இரண்டு கோடி ரூபாய் என வேட்புமனு தாக்கல் செய்ததும், பின்னர் மனுதாரரின் கோரிக்கையின் பேரில் கிடைத்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அறிக்கையில், சத்யாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 13 கோடி ரூபாய் என்றும் தெரியவந்தது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், இரண்டு மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணைகளை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். அந்த எஃப்.ஐ.ஆர் பதிவில், 2016 முதல் 2021 வரை எம்.எல்.வாக இருந்த காலகட்டத்தில் சத்யா தன் மகள் கவிதா மற்றும் தன் மனைவி ஜெயசித்ரா ஆகியோரின் பெயரில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், முண்டியம்பாக்கம், ஆந்திரா போன்ற இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளை வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6:30 மணியளவில் வடபழனிலுள்ள சத்யாவின் வீட்டில் சோதனை நடத்தத் தொடங்கினர். தொடர்ந்து சென்னையில் சத்யாவுக்குத் தொடர்புடைய பிற இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அ.தி.மு.க அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

மேலும், தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆர்.எஸ் ராஜேஷ். இவர் அ.தி.மு.க. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளார்கள்.



from India News https://ift.tt/RG3tWjM

Post a Comment

0 Comments