மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் எடுத்து நடந்தி வந்த மணல் குவாரிகளில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றில் ராமசந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டில் இறங்கினர். இந்தக் குவாரியை திருநெல்வேலியை சேர்ந்த ராஜா என்பவர் தான் மேற்பார்வை செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அரசு அனுமதித்த அளவை விட அளவுக்கதிகமாக இந்த மணல் குவாரியில் மண் கொள்ளை நடைபெற்று வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக 10 அடிக்கு மேல் ஆற்றில் மணல் அள்ளியது தொடங்கி, அதிகளவில் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகவும், தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் 2 கார்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படையினர், இந்தக் குவாரியில் ரெய்டைத் தொடங்கினர்.
வழக்கமாக நூற்றுக்கணக்கான லாரிகளும், ஊழியர்களும் நிறைந்து காணப்பட்டு வந்த குவாரியில், ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. குவாரியில் இருந்த அலுவலகம் போன்ற தகர ஷெட் ஒன்றினுள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். மேலும், திருச்சி கனிம வள கண்காணிப்பு இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவி பொறியாளர் சாதிக்பாஷா ஆகியோரை சோதனை நடைபெற்ற மணல் குவாரிக்கு வரவழைத்து, அவரிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
`தினமும் எவ்வளவு மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டது? முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வந்ததை ஏன் தடுக்கவில்லை? மணல் ஒப்பந்ததாரர்கள் யார் யார்?’ போன்ற பல்வேறு கேள்விகள் விசாரணையில் கேட்கப்பட்டதாகச் சொல்கின்றனர். மேலும், லாரியில் மணல் அள்ளுவதற்காக அரசு கொடுத்த டோக்கனைப் போல, சில போலியான டோக்கன்களை குவாரி தரப்பில் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சொல்கின்றனர். அப்படியான சில ஆவணங்களையும் இந்த ரெய்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனையானது, இரவு 7 மணிக்குத் தான் முடிவடைந்தது. சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், திருச்சி கோட்ட கனிம வள கண்காணிப்பு உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர், ஆறுமுகம் மற்றும் அலுவலக உதவியாளர் சத்யராஜ் ஆகிய மூன்று பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 10 மணி நேர விசாரணைக்குப் பின்னரும் அமலாக்கத்துறை அதிகாரிகளால், கனிம வளத்துறையைச் சேர்ந்த 3 பேர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சோதனை குறித்து விஷயமறிந்த சிலரிடம் பேசினோம். "ரெய்டு குறித்தான தகவல் முன்பே தெரிந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. காரணம் குவாரியின் சூழல் வழக்கத்திற்கு மாறாக ஆள் நடமாட்டமே இல்லாத அளவிற்கு மாறிப் போய் இருந்தது. அதிகாரிகள் வரும்போது குவாரியின் முக்கிய ஊழியர்கள் எவரும் இல்லை. எல்லோரும் விஷயமறிந்து முதல்நாளே கிளம்பிவிட்டனர். இதனால் குவாரியில் எந்தவித ஆவணங்களும் சிக்கியிருக்க வாய்ப்பில்லை." என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/VfLP4i1
0 Comments