டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவைப் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் ஒன்றரை வருடங்களைக் கடந்துவிட்டன. இன்னும் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன், ரஷ்யாவிலுள்ள பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைன், ரஷ்யா என இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணிகாத்துவரும் இந்தியா, தற்போது ஜி20 நாடுகளுக்கு தலைமை வகித்து வருகிறது.
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். ஜி20-யில் உறுப்பினராக இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தப் பிரகடனத்தில், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால், போர் குறித்து இந்தியா சார்பில் கண்டிப்புடன் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், `` டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு ஒரு மைல்கல். இது ஒரு திருப்புமுனை உச்சிமாநாடு, இது பல முக்கியத் துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது. ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன. உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை. உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க, வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக அளித்த வாக்குறுதியில், மேற்கு நாடுகள் எதையும் செய்யவில்லை. எல்லோரும் அமைதியை விரும்புகிறார்கள். சுமார் 18 மாதங்களுக்கு முன்பு, இந்த மோதலைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதன் பிறகு, ஆங்கிலோ-சாக்சன்கள் உத்தரவின்படி ஜெலென்ஸ்கி அதற்கு உடன்படவில்லை. இப்போது உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்யர்களை உடல்ரீதியாக துன்புறுத்துவதாக அச்சுறுத்துகின்றனர்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/isX9Crl
0 Comments