பிரதமர் மோடியை பேச வைத்ததே ‘I.N.D.I.A’ கூட்டணியின் முதல் வெற்றியா?!

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதோடு அவர் நாடாளுமன்றத்தில் வன்முறை குறித்து பேச வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்ததையடுத்து, விவாதத்தில் பங்கெடுத்துப் பேசுவதற்காக ஆக 10 -ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் மக்களவைக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடி

அதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை ஆற்றினார். தனது உரையைத் தொடங்கும்போது, ‘நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்’ என்றவர், ‘நம்பிக்கையில்லா தீர்மானங்கள் அனைத்தும் பாஜக-விற்கு ராசியானவை’ என்றார். மேலும், ‘2028-ம் ஆண்டிலும் எதிர்க்கட்சிகள் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்’ என்று, அடுத்தும் தாங்கள்தான் ஆட்சி அமைக்க இருக்கிறோம் என்ற பிரதாமர் மோடி, ‘2018-ம் ஆண்டு இதே போல் தனது தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோற்றன’ என்பதையும் பதிவு செய்தார்.

பிரதமர் மோடி பேசி முடித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. மோடி உரையின்போதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. நிலைமை இவ்வாறு இருக்க, ‘நாட்டில் நடக்கும் மக்கள் பிரச்னைகள் குறித்து பிரதமர் வாயே திறப்பதில்லை...’ என்று தொடர்ந்து எதிர்கட்சிகள் கூறி வரும் நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அனைத்து எதிர்கட்சிகளும் ஓர் அணியில் நின்று பிரதமர் மோடியை பேச வைத்தது ‘I.N.D.I.A’ கூட்டணியின் முதல் வெற்றியா என்கிற கேள்வி அரசியல் அரங்கில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த வெற்றி தற்காலிகமானதா அல்லது தொடருமா என்பதும் விவாத பொருளாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.கே.முரளிதரன், “பிரதமர் மோடி வந்து பேசியதையே வெற்றி என்று சொல்ல கூடிய அளவுக்குத்தான், இந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. ஒரு நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்தில் மக்களுக்கான தேவைகளையும், சேவைகளையும் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்க கூடிய கடைமையுள்ளவர். ஆனால், இந்த இருபது நாள் நாடாளுமன்றம் விவாதத்தில் ஆரம்பித்த போது வந்தவர், அடுத்து முடிக்கின்ற போதுத்தான் வருகிறார்.

ஜி.கே.முரளிதரன்

இதை வெற்றி என்று சொல்வதா தோல்வி என்று சொல்வதா என்பதை விட நம் நாட்டின் தலையெழுத்து என்று சொல்லலாம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும் வருத்தப்பட கூடிய விவாதம்தான் இந்த விவாதம். நேரு, இந்திரா காந்தி இருந்த ஆசனத்தில், இன்னும் சொல்ல போனால் பாஜக-விலேயே மதிக்கப்பட கூடிய தலைவராக இருந்த வாஜ்பாய் இருந்த ஆசனத்தில் இப்படி ஒரு மனிதர் இருப்பது மக்களுக்கான தோல்விதான். இது காங்கிரஸ் அணிக்கான வெற்றி, ‘I.N.D.I.A’ அணிக்கான வெற்றி என்பதை விட மக்களுக்கான தோல்விதான் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது” என்றார்.

“இது முதல் வெற்றியாக இருக்கலாம். ஆனால், முழுமையான வெற்றியாகாது...” என்கிறார், மூத்த பத்ரிகையாளர் பிரியன். ஏன்... என்பது குறித்து விரிவாக பேசியவர், “எதற்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ‘மணிப்பூர் பற்றி பேச மாட்டீங்கிறீங்க, அங்கு ஏகப்பட்ட அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் சரியாக கையாளவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு பல விஷயங்கள் முன்னெடுக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்து கொண்டு அதையே தொடர்கிறீர்கள். மணிப்பூருக்கு வளர்ச்சி வருவது குறித்து சொல்வதெல்லாம் அர்த்தம் கிடையாது.

ப்ரியன்

மூன்று மாத காலம் என்ன செய்தீர்கள்...’ என்பதையெல்லாம் வைத்து பேசாத பிரதமரை நாடாளுமன்றம் வரவழைத்து பேசினோம் என்று சொல்வது வேண்டுமானால் முதல் வெற்றியாக இருக்கலாம். ஆனால், எதிர்கட்சிகளுக்கோ, மணிப்பூர் மக்களுக்கோ முழு வெற்றி கிடையாது. அந்த இரண்டு இன மக்களும் இனிமேல் சேர்ந்து வேலை செய்வார்களா... அரசியல் ரீதியாக வாக்கு வங்கிக்காக பாஜக-வால் பிரிக்கப்பட்ட அந்த இரு இன மக்கள் என்றைக்கு நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்களோ அல்லது அதற்காக பாஜக ஓரடியாவது எடுத்து வைக்கிறதோ அன்றைக்குத்தான் முழுமையான வெற்றி” என்றார்.



from India News https://ift.tt/r5aWK6d

Post a Comment

0 Comments