நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல்களை நடத்துவதற்கு பாரபட்சமற்ற ஒரு தேர்தல் ஆணையம் அவசியம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால் அதைச் சீர்குலைப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்கள் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான பிரதமர் தலைமையிலான குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ஒரு மத்திய அமைச்சர் ஆகியோரை இடம்பெறச் செய்யும் வகையில் புதிய மசோதா ஒன்றை மாநிலங்களவையில் பா.ஜ.க அரசு ஆகஸ்ட் 10-ம் தேதி அறிமுகம் செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஆகியோரை நியமிப்பதற்கு ‘கொலீஜியம்’ முறை இருக்கிறது. அதுபோல, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கும் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அதன் மீது கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விரிவான விவாதம் நடத்தியது.
அதன் முடிவில், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்துக்கு உட்பட்டு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். அவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2-ம் தேதி தீர்ப்பளித்தது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பில், ‘தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என்று சட்ட ஆணையம் மற்றும் பல்வேறு குழுக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாகச் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது தேசத்துக்கு முக்கியம். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அது குறித்து சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுப்பவராக அவர் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது.
ஆட்சியாளர்கள் சொல்கிறபடி நடக்கிற தலையாட்டி பொம்மைகளாகத் தேர்தல் ஆணையர்கள் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க சுதந்திரமான அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த நிலையில், ‘தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா -2023‘ என்கிற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த மசோதாவின்படி, தேர்தல் ஆணையர்களைப் பரிந்துரைக்கும் குழுவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெற மாட்டார் என்பதுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவதாக மத்திய அரசு வாய்மொழியாக மட்டுமே கூறிவருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட ஆறு ஆண்டுகள் முழுப் பதவிக்காலமும் இருந்ததில்லை. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல” என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும், ‘மத்திய அரசு, ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 1991-இன் பிரிவு 6-ஐ மீறுவதாகும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றம் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியலமைப்பு நிர்ணய சபை விரும்பியது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72 ஆண்டுகள் ஆனபோதிலும், அதுதொடர்பாக எந்தவொரு தனிச்சட்டமும் இல்லை. இது கவலைக்குரிய போக்கு’ என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
அத்துடன், ‘பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்திற்கு உட்பட்டு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும்” நீதிபதி கே.எம்.ஜோசப் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023-வைக் கொண்டுவர மத்திய அரச முடிவுசெய்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை குழுவிலிருந்து வெளி யேற்றும் விதமாக சட்டத் திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இந்த மசோதாவின்படி, முதலில் அமைச்சரவைச் செயலாளரின் தலைமையில் ஒரு தேடல் குழு, ஐந்து பேர் கொண்ட பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அந்த பட்டியலில் இருந்து தகுதியானவர்களை, பிரதமர் தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் அடங்கிய தேர்வுக்குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். இந்தக் குழுவிலிருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை இடம்பெறச் செய்யாதது பா.ஜ.க-வின் அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/xGIk85v
0 Comments