``உதயநிதியின் போராட்ட அறிவிப்பு... அதிமுக மாநாட்டைப் பார்த்து பயந்து, நடுங்கி...” - எடப்பாடி அட்டாக்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``இந்தியாவே வியக்கும் வகையில் அ.தி.மு.க மாநாடு இருக்கும். 15 லட்சம் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இதைப் பார்த்து பயந்து, நடுங்கிதான் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை மையமாக வைத்து தி.மு.க இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்துதான் முதல் கையெழுத்து என்று சொல்லி வாக்கு கேட்டார்கள். நீட் விலக்குக்காக நாங்களே பல்வேறு முயற்சிகள் எடுத்தோம். தி.மு.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள் அமைத்த `இந்தியா' கூட்டணி மூலமாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கலாம்.

நீட் விவாகரத்தில் ஆளுநர்மீது குற்றம்சாட்டி தி.மு.க தொடர்ந்து நாடகமாடுகிறது. நீட் விவகாரம் தொடர்பாக தி.மு.க பேசுவது எல்லாம் பொய். காவிரி விவகாரத்தில், ‘நானும் டெல்டாகாரன்.’ என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால், கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரை பெற்றுத் தராமல் போனதால் பயிர்கள் எல்லாம் கருகிவிட்டன.

நீட் தேர்வு முடிவுகள்

மாநிலத்துக்கு பிரச்னை என்றபோது ‘எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன்’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொன்னார். அவர் ஆண்மகன். ‘காவிரி தீர்ப்புப்படி தண்ணீரை முழுமையாக திறந்துவிட்டால்தான் கூட்டத்தில் கலந்துகொள்வேன்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும்.

நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் கையெழுத்து போடுகிறாரோ.. இல்லையோ.. எதற்கும் `தில்' வேண்டும். நான் 7.5% இட ஒதுக்கீடு எப்படி வாங்கிக் கொடுத்தேன். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே. ஏன் பயம். எந்த அதிகாரத்தையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சியில் தொடரவே விரும்புகின்றனர். பத்தாண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை இவர்களால் ரத்துசெய்ய முடியாது.

ஸ்டாலின்

அ.தி.மு.க உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்ததால், மருத்துவப் படிப்புக்கு இந்தாண்டு 606 பேர் தேர்வாகியிருக்கின்றனர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரூ.2,73,000 கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம். கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. எதற்கெடுத்தாலும் `திராவிட மாடல் ஆட்சி' என்கின்றனர். இனி கழிப்பறை கட்டினால்கூட `திராவிட மாடல் ஆட்சி' என்று சொல்வார்கள்” என்றார்.



from India News https://ift.tt/9rLYDlE

Post a Comment

0 Comments