`எனது தந்தை சொந்த மக்கள் மீதே குண்டு வீசினாரா?’ - கொதித்த சச்சின் பைலட்; ஆதரவு குரல் கொடுத்த கெலாட்

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மாநில தேர்தல்களை பா.ஜ.க-வும், காங்கிரஸும் மிக முக்கியமனதாகப் பார்க்கிறது. அத்தகைய முக்கிய மாநில தேர்தல்களில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானும் ஒன்று. அங்கு, காங்கிரஸுக்குள்ளே இரண்டு பிரிவாகக் காணப்படும் முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் பா.ஜ.க-வை கடுமையாகத் தாக்கிவந்தாலும், அவ்வப்போது சொந்த அரசுக்கு எதிராகவும் சச்சின் பைலட் குற்றம்சாட்டி வருகிறார்.

காங்கிரஸ் - அசோக் கெலாட் - சச்சின் பைலட்

இதன் காரணமாக, காங்கிரஸ் மேலிடம் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அதற்குப் பிறகும் இருவரின் செயல்பாடுகள் முன்பிருந்தது போல அப்படியே தான் இருந்தது. இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தற்போது சச்சின் பைலட்டுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார்.

முன்னதாக பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா, ``1966-ல் மார்ச் 5-ம் தேதி மிசோரம் தலைநகர் மீது குண்டுவீசி தாக்கிய இந்திய விமானப்படையின் ஜெட் விமானங்களை ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட்டின் தந்தை), சுரேஷ் கல்மாடி ஆகியோர் இயக்கினர். பின்னர் இருவரும் காங்கிரஸ் அரசில் எம்.பி-க்களாகவும், அமைச்சர்களாகவும் ஆனார்கள்.

பா.ஜ.க தலைவர் அமித் மாள்வியா

இதன்மூலம், இந்திரா காந்தி அவர்களுக்கு அரசியலில் வெகுமதி கொடுத்தார் என்பது தெளிவாகிறது. குறிப்பாக, வடகிழக்கில் சொந்த மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அவர் மரியாதை கொடுத்தார்" என்று ட்விட்டரில் விமர்சித்தார்.

சச்சின் பைலட்

பின்னர் இத்தகைய குற்றச்சாட்டால் அமித் மாளவியாவுக்கு ட்விட்டரில் பதிலளித்த சச்சின் பைலட், ``நீங்கள் கூறுவது தவறான தேதி, தவறான உண்மை. ஒரு இந்திய விமானப்படை விமானியாக, என்னுடைய மறைந்த தந்தை வெடிகுண்டுகளை வீசினார்தான். ஆனால் அது 1971-ல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது கிழக்கு பாகிஸ்தானில் நடந்தது. நீங்கள் சொல்வது போல, 1966 மார்ச் 5-ல் மிசோராமில் அல்ல. அதோடு, 1966 அக்டோபர் 29-ல் தான் அவர் இந்திய விமானப்படையிலேயே பணியமர்த்தப்பட்டார்" என்று கூறினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட், இந்திய விமானப்படையின் ஓர் துணிச்சலான விமானி. அவரை அவமதிப்பதன் மூலம் இந்திய விமானப்படையையே பா.ஜ.க அவமதிக்கிறது. முழு நாடும் இதைக் கண்டிக்க வேண்டும்" என்று பா.ஜ.க-வைச் சாடினார்.



from India News https://ift.tt/0RTNanG

Post a Comment

0 Comments