சிலை திறப்பு விழா: டி.எம்.எஸ் குறித்து பேசாத முதல்வர்... வருத்தத்தில் சௌராஷ்டிர மக்கள்!

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

முதலமைச்சருடன் டி.எம்.எஸ்-சின் மகன் பால்ராஜ்

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் மக்கள் மத்தியில் புகழ்பெறவும், தமிழக அரசியல் மாற்றத்துக்கு காரணமான கொள்கைப் பாடல்களையும், அதற்கு இணையாக ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களையும் பாடி தமிழக மக்களுடன் இரண்டற கலந்தவர் டி.எம்.சௌந்தரராஜன். மதுரையை சேர்ந்த இவர், நடிகராக சில படங்களில் நடித்தும் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர்.

டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகரான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 2008- ஆம் ஆண்டு இவருக்கு பிரமாண்ட விழா எடுத்தார். பின்னர், கடந்த 2013-ஆம் ஆண்டு டி.எம்.எஸ் மரணமடைந்தார்.

மு.க.ஸ்டாலின்

தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமையைத் தேடித்தந்த டி.எம்.எஸ்சை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு மதுரையில் சிலை அமைக்க வேண்டும், அவர் வசித்த பகுதிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டுமென டி.எம்.எஸ்-சின் ரசிகர்களும், குடும்பத்தினரும் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் டி.எம்.எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் அவர் வசித்த மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்று பெயர் சூட்டி கடந்த மார்ச் மாதம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் சிலை வைக்கவேண்டும் என்று மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். காரணம், தெற்குத் தொகுதியில் அதிகமான அளவில் சௌராஷ்டிரா மக்கள் வசித்து வருகின்றனர். மதுரையில் டி.எம்.எஸ்ஸுக்கு சிலை வைப்பதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலைகள் வேகமாக நடந்தது.

மு.க.ஸ்டாலின்

முனிச்சாலை சந்திப்பில் சிலை தயாராகியும் கடந்த மாதம் முதலமைச்சர் மதுரை வந்தபோது திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது திறக்கவில்லை.

இந்நிலையில் 17,18 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் திட்டமிட்ட நிலையில், ராமநாதபுரம் செல்லும் வழியில் மதுரையில் டி.எம்.எஸ் சிலையை திறந்துவைக்க உள்ளதாக அறிவிக்கபட்டது.

டி.எம்.எஸ் சிலை

"மதுரையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சௌராஷ்டிரா மக்கள் வசித்து வரும் நிலையில் டி.எம்.எஸ்ஸின் சிலை திறப்பு விழாவை பெரிய மைதானத்தில் நடத்துவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி ஏற்பாடு செய்யாமல், சிலை அமைந்துள்ள முனிச்சாலை பகுதியில் குறுகிய இடத்தில் நிகழ்சியை கடமைக்காக நடத்தியது போல் நடத்தியுள்ளனர். இது செளராஷ்டிரா அதிருப்தி அடைய வைத்தது. அது மட்டுமின்றி டி.எம்.எஸ்ஸை இக்கால தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் இந்நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தவும் இல்லை.

பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, சென்னை, பெங்களூரு மட்டுமின்றி வெளி நாடுகளிலும் வசிக்கும் ஏராளமான சௌராஷ்டிர மக்கள் வந்து இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் அவகாசம் அளிக்கப்படவில்லை. மதுரையில் பல்வேறு பகுதியில் வசிக்கும் சௌராஷ்டிர மக்களே அதிகம் கலந்துகொள்ளவில்லை" என்றனர் அச்சமூக பிரமுகர்கள்.

டி.எம்.சௌந்தரராஜன் சிலை

தொடர்ந்து பேசியவர்கள், "சிலையை திறந்து வைத்த முதல்வர், டி.எம்.எஸ் குறித்து சிறிது நேரம் பேசுவாரென்று எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களின் விழாக்களில் கலந்துகொண்ட முதல்வர் அவர்களின் அருமை பெருமைகள் குறித்து பேசியுள்ள நிலையில் அனைவரும் கொண்டாடும் டி.எம்.எஸ் குறித்து பேசாதது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது." என்றனர்.

சிலையினை திறந்து வைத்ததற்காக நன்றி தெரிவித்துப் பேசிய டி.எம்.சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். பால்ராஜ், 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்ற பாடல் வரிகளை பாடி, "என் தந்தை பாடிய பல பாடல்களில் இது திராவிட மாடல் அரசுக்கு பொருத்தமான பாடல்" என்று தெரிவித்தார்.



from India News https://ift.tt/ceQIWiD

Post a Comment

0 Comments