நாங்குநேரி சாதிய கொடூரம்: பள்ளி மாணவர்களை பதம்பார்க்கும் சாதிய தீ - என்ன நடவடிக்கை எடுக்கிறது அரசு?

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவரின் சகோதரி 9-ம் வகுப்பு படிக்கும் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் சாதிய வன்மத்தோடு சக பள்ளிக்கூட மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வெட்டுப்பட்ட இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெட்டுபட்ட மாணவன் சின்னதுரை

தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தலித் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``மாணவர்களாகிய நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது உங்கள் புத்தியை கூர்மைப்படுத்த வேண்டும் எனத்தான் ஆசைப்படுகிறோம்; கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க வேண்டும் என நாங்கள் ஆசைப்படவில்லை. ஆனால், ஒரு சில சம்பவங்கள் எங்களை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. சோர்வடையச் செய்கிறது. காரணம் நாங்கள் மாணவர்களை அறிவுசார்ந்து முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் ஒரே ஊர்காரராக இருந்தும் உங்களுக்குள்ளேயே இருக்கும் வேற்றுமை உணர்வை விதைக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் அவர்களை ஒடுக்க வேண்டும் என நினைக்கும் அரசாங்கம் இந்த அரசு. தவறு செய்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்டுள்ள மாணவர், அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவரின் தங்கையிடம் தொலைபேசியில் பேசினேன்.

என்னுடைய அந்த இரண்டு தம்பி, தங்கையை பாதுகாப்பான முறையில் ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைப்பேன். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அது என் கடமை. அதேசமயம், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களும் எல்லோரையும் நம்முடையவர்களாக பாருங்கள். தயவு செய்து இதை மனதில் ஏற்றுக்கொண்டு, படிப்பில் கவனம் செலுத்துங்கள். நமக்குள் வேற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் செயல்படாதீர்கள். உங்களுக்காக பல திட்டங்களை தீட்டும் முதல்வரை பெருமைபட செய்யுங்கள்!" என வீடியோ மூலம் ட்விட்டர் பதிவில் கோரிக்கை வைத்தார்.

அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸின் அந்த ட்விட்டை குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம்கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.

மு.க.ஸ்டாலின்

குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்!" என கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், காயமடைந்த நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்துரையின் தாயாரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறியிருக்கிறார்.

அதேபோல தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி, `` நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பெற்றோர், ஆசிரியர் என நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்னை இது. சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை. சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைகிறேன்!" என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி

அரசின் நடவடிக்கை என்ன?

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை ஏழு மாணவர்களை கைதுசெய்திருக்கிறது. அவர்கள் அனைவரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், நாங்குநேரி விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைத்து உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்னைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அந்த மாணவனின் உயர் கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்னை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

தீண்டாமை கொடூரம்.

அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை:

வி.சி.க தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன், ``மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளைக் கட்டுவது, சைக்கிள்கள்- இரு சக்கர வண்டிகளில் சாதி அடையாள முத்திரைகளை வரைவது அல்லது ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளைச் சாதிய - மதவெறி அமைப்புகள் மாணவர்களிடையே திணிப்பதும் நடக்கிறது. அரசு இவற்றையெல்லாம் கண்காணித்து மாணவச் சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும். சின்னதுரை குடும்பத்துக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். வேறு பள்ளியில் சின்னதுரை கல்வி தொடர அரசு ஆவண செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா என ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்தப் பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து, சட்டபூர்வமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்!" என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதேபோல பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``பாடங்களைக் கடந்து அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதிக்க பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; வாரத்துக்கு ஒருமுறையாவது ஆலோசனை வகுப்புகளை நடத்த வேண்டும். அவற்றை பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலில் காயமடைந்த மாணவருக்கும், அவரது சகோதரிக்கும் தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர எவிடென்ஸ் அமைப்பினர் அரசுக்கு 8 கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அது புகைப்பட வடிவில் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

எவிடென்ஸ் அமைப்பினர் அரசுக்கு 8 கோரிக்கை

இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது... இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்யப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



from India News https://ift.tt/audFxZR

Post a Comment

0 Comments