"சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்துவிட்டு, `எங்கு இந்தியைத் திணிக்கிறோம்' என்பதா?" - திருச்சி சிவா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவுற்றது. இதில் மணிப்பூர் வன்முறை பற்றிய எதிர்க்கட்சிகளின் விவாத கோரிக்கை காரணமாகவே பல நாள்கள் அவை ஒத்திவைக்கப்பட்ட போதிலும், சுமார் 25-க்கும் மேற்பட்ட மசோதாக்களை பா.ஜ.க அரசு கொண்டுவந்து, அதில் பலவற்றை நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ``மணிப்பூரில் கடந்த 100 நாள்களுக்கு மேலாகப் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களிலும், காடுகளிலும் தங்கி வாழ்கிறார்கள்.

இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட காட்சியை உலகமே பார்த்தது. பல நாடுகள் கண்டித்தன. ஆனால் அதற்கு எந்தவிதமான விளக்கமும் தரவில்லை. விவாதம் நடத்த வேண்டும் என்கிறபோது, அதற்குப் பெயரளவில் ஏதாவது ஒன்றை நடத்தி, ஏதாவது ஒரு சமாதானம் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருப்போம். ஆனால் பிரதமர் இது பற்றி ஒரு நாள்கூட எந்த கருத்தும் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் பதில் சொல்லவும் வரவில்லை. நாங்கள்தான் அவைகளை முடக்கி வைக்கிறோம், எதையும் நடக்க விடாமல் செய்கிறோம் என்று குற்றம் சுமத்தினார்கள்.

திருச்சி சிவா எம்.பி

பிரதமர் வர மறுக்கிறார் என்பதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தோம். கடைசியாகப் பிரதமர் இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் பேசினார். அதில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக மணிப்பூரைப் பற்றி பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தவுடன், அதற்குப் பிறகு இரண்டு நிமிடங்கள் மட்டும் மணிப்பூர் பற்றி பேசினார். மூன்று மாதங்களாகிவிட்டன, பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தவர்களில் எத்தனை பேரைக் கைதுசெய்தார்கள், என்ன நடவடிக்கை எடுத்தார்கள், இது போன்ற வேற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவா, இணையதளம் அங்கு முடக்கப்பட்டிருக்கிறதே என்றெல்லாம் கேட்டால், இதற்கெல்லாம் பதில் இல்லை. மாறாக தி.மு.க-வுக்கு குறி வைக்கிறார்கள்.

மோடி, அமித் ஷா

Indian penal code, criminal procedure code, evidence act என்கிற சட்டத்தின் முக்கியமான மூன்றை மாற்றுவதற்கு வேறு மசோதாக்களை இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த மசோதாக்களின் பெயர்களைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கும். ஏற்கெனவே புழக்கத்திலிருந்த, பயன்பாட்டிலிருந்த சட்டங்களை மாற்றுகிறார்கள். நினைத்ததை எல்லாம் சாதிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இந்தியில் பெயர் சூட்டுகிறார்கள். பின்னர், `நாங்கள் என்ன இந்தியையா திணிக்கிறோம்?' என்கிறார்கள். இதையெல்லாம் எல்லோரும் யோசிக்க வேண்டும். இந்த ஆட்சி இருக்கக் கூடாது" என்று கூறினார்.



from India News https://ift.tt/fgipXeZ

Post a Comment

0 Comments