`அதிமுக மாநாடு நிதி’ முதல் `கனி'க்குப் போட்டியாக `மலர்' பிரமுகர் வரை | கழுகார் அப்டேட்ஸ்

அவார்டு மாவட்டத்தில் தங்கமான‌ அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியத்தில் உட்கட்சிப்பூசல் காரணமாக, இலைக் கட்சி பிரமுகர் தன் சேர்மன் பதவியை இழந்தார். சுயேச்சைகள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களின் ஐக்கியத்தோடு சூரியக் கட்சி பெரும்பான்மை பெற்றது. இந்த நிலையில் ஒன்றியத் தலைவர் பதவிக்கு அமைச்சரின் பரிந்துரையோடு வந்த உடன்பிறப்புகளை ஓரங்கட்டிவிட்டு, இலைக் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய துணைத் தலைவரையே பொறுப்பு சேர்மனாக செயல்பட உத்தரவு பிறப்பித்து, அதற்கான ஆணையையும் வழங்கிவிட்டார் மாவட்ட உயரதிகாரி. இந்த உத்தரவால் டென்ஷனான தங்கமானவர் கொதிப்பின் உச்சத்தில் இருக்கிறாராம். அமைச்சரைப் பகைக்கும் அளவுக்கு அதிகாரிக்கு தைரியம் வந்தது எப்படி என்று விசாரித்தால், பின்னணியில் இருப்பதோ சீனியரான இனிஷியல் அமைச்சராம்!

மதுரையில் நடக்கவிருக்கும் அ.தி.மு.க மாநாட்டுக்கான வேலைகளுக்கு தினமும் கோடிக்கணக்கில் செலவாகிறது. முதலில் சேலத்திலிருந்தே இனிப்பை அனுப்பிக்கொண்டிருந்த துணிவானவர், இப்போது மதுரையைச் சுற்றியிருக்கும் இரண்டு நிறுவனங்களைக் கைகாட்டிவிட்டாராம். ரெய்டில் சிக்கிய பிரபல ஒப்பந்த நிறுவனம், தமிழகமெங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தும் பிரபல கல்விக் குழுமம் ஆகியவற்றின் வழியாகவே ‘நிதி’ வருகிறதாம்.

இத்தனைக்கும் இந்த இரண்டு நிறுவனங்களிலும் ஆளும் தரப்பினரின் முதலீடும் அதிகமாக இருக்கிறதாம். இலைக் கட்சியின் அவசரத் தேவைக்கு தி.மு.க-வின் நிதியே கைகொடுப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக மீண்டும் கனிமொழி களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தூத்துக்குடி தொகுதியில் நாம் போட்டியிடுவது உறுதி என அண்ணாமலையும் சொல்லிவிட்டாராம். தேர்தல் செலவு எவ்வளவு ஆனாலும், சர்ச்சைக்குரிய நிறுவனமே அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதால், ஆளாளுக்கு சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்களாம். சமூக பலம், தேர்தல் முன் அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தனக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சர்ச்சைக்குரிய ‘மலர்’ பிரமுகரும் கேட்க, அண்ணாமலையும், ‘பார்க்கலாம்க்கா...’ என்று சொல்லிவிட்டாராம்.

கனிமொழி

“தூத்துக்குடியில் தாமரை ‘மலர்ந்தே தீரும்’ என தமிழிசை ஸ்டைலில் ஓப்பன் மைக்கிலேயே அண்ணாமலை பேசியிருப்பதால், நம்மை மனதில்வைத்துத்தான் தலைவரு அப்படிப் பேசியிருக்காரு என்று உற்சாகத்தில் இருக்கிறாராம் ‘மலர்’ பிரமுகர். ‘அச்சச்சோ... அவரா... அவர் ரொம்ப பயங்கரமானவராச்சே’ என்று இப்போதே எதிர்க்கோஷ்டிகளெல்லாம் தடைபோட ஆரம்பித்துவிட்டதுதான் சோகம்.

காட்பாடி காங்கேயநல்லூர் தொடக்கப் பள்ளியில் ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேலிடம், ‘இங்கு சத்துணவு தரமாக இல்லை’ எனப் புகார் சொன்னார் வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷ். அவரிடம் கோபப்பட்ட ஆட்சியர், ‘இன்ஸ்பெக்டர் இந்த ஆளை ரிமாண்ட் பண்ணுங்க’ என்று ஓப்பனாகவே உத்தரவிட்டார்.

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

இந்த விவகாரம் சர்ச்சையானதும், ஆட்சியர் பின்வாங்கினார். கடந்த ஆண்டு காட்பாடி புதிய ரயில்வே மேம்பாலத்தைத் தன்னிச்சையாக ரிப்பன் வெட்டித் திறந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கைதுசெய்யப்பட்ட விவகாரத்திலும், இந்த ஆட்சியரின் பெயரே அடிபட்டது. ‘ஆட்சியர் குமாரவேல் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரைப்போலவே செயல்படுகிறார்.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு

தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அவர் வேலூர் கலெக்டராகவே தொடர்வதற்கு அமைச்சர் துரைமுருகனின் ஆசியே காரணம்’ என ஆட்சியர் குறித்து அ.தி.மு.க மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருக்கிறார்களாம் வேலூர் ர.ர-க்கள். ‘மதுரை மாநாடு முடிந்ததும் இருக்கிறது கச்சேரி’ என்கிறார்கள் வேலூர் ர.ர-க்கள்!

மீண்டும் எம்.பி‌-யாகப் பதவியேற்ற ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டுக்கு ரீ என்ட்ரி கொடுக்க ஊட்டி வழியைத் தேர்வுசெய்திருந்தார். ரோட்டோரக் கடையில் நின்று டீ குடித்தது முதல் பழங்குடிகளுடன் பாரம்பர்ய நடனமாடி மகிழ்ந்தது வரை ஏகப்பட்ட ஹைலைட்ஸ் இருந்தாலும், கட்சி நிர்வாகிகளைக் கடைசிவரை பக்கத்திலேயே சேர்த்துக்கொள்ளவில்லையாம்.

வேடிக்கை என்னவென்றால், ஊட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ உட்பட பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு ராகுலின் பயணத்திட்டம் முதல் நாள் இரவுதான் தெரியவே செய்ததாம். இருப்பினும், காந்தி சிலை அமைக்கப்பட்டிருக்கும் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் எம்‌.எல்.ஏ தலைமையில் கதர்கள் மாலையும் கையுமாக காலையிலிருந்தே காத்துக் கிடந்திருக்கிறார்கள். ஆனால், காரைவிட்டு கீழே இறங்காமல் சென்றிருக்கிறார் ராகுல். “ராகுல் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் செல்லத் தகுதி பெற்றதை வாழ்த்த, ஒவ்வொரு தொண்டரும் ஆர்வத்தோடு இருந்தார். ஆனால், இப்படி எங்களை ஒதுக்குமளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்... ராகுலுக்கு ஏன் இந்தக் கோபம்?” என புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் நீலகிரி கதர்கள்.



from India News https://ift.tt/0XI1CMc

Post a Comment

0 Comments