கர்நாடகாவில், வேளாண் துறை அமைச்சர் லஞ்சம் கேட்டதாக ஆளுநருக்கு போலியாகக் கடிதம் எழுதிய வேளாண் துறை அதிகாரிகள் இரண்டு பேரை சி.ஐ.டி அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
முன்னதாக, ஆறு லட்சம் ரூபாய் முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்குமாறு, வேளாண் இணை இயக்குநர் மூலமாக வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, மாநில வேளாண் துறை அமைச்சர் என்.சலுவராயசாமி அழுத்தம் கொடுப்பதாகக் கடந்த ஜூலை மாதம் ஆளுநர் மாளிகைக்கு புகார் கடிதம் வந்திருக்கிறது.
மேலும், அந்த புகார் கடிதத்தில், `லஞ்சம் கேட்கும் இந்த பாரம்பர்யத்தை கட்டுப்படுத்தாவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம்' என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், இந்தப் புகார் கடிதம் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர் வந்திதா சர்மாவுக்கு கடிதம் அனுப்பினார்.
இன்னொருபக்கம், முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் என்.சலுவராயசாமியும், புகார் கடிதம் போலியானது என்றும், இதில் எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறினர். அதையடுத்து, இந்த விவகாரத்தை சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றினார் சித்தராமையா. இந்த நிலையில், ஆளுநருக்கு அனுப்பப்பட்டது போலி கடிதம் என வேளாண் துறை அதிகாரிகள் இரண்டு பேரை சி.ஐ.டி அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய சி.ஐ.டி அதிகாரியொருவர், ``மாண்டியா மாவட்டத்தின் கே.ஆர்.பேட்டையில் ஏழு உதவி வேளாண் இயக்குநர்கள் சார்பில் போலி கடிதம் எழுதியதாக வேளாண் துறை அதிகாரிகள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்" என்று தெரிவித்திருக்கிறார்.
சி.ஐ.டி-யின் இந்த கைது நடவடிக்கை குறித்து முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, ``அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதன் மூலம், வேளாண் துறையில் பணியிட மாற்றம் போன்றவற்றில் மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் அமைச்சர் ஈடுபட்டது உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
from India News https://ift.tt/7xSAGtH
0 Comments