மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நிறைவு; விரைவில் கள ஆய்வு..?

தமிழக அரசின் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மற்றும் உதவித்தொகை பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கான மூன்று நாள் சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. விண்ணப்பம் சரிபார்ப்பு பணிகளைத் தொடர்ந்து, தேவைப்படும் பயனாளின் வீடுகளில் விரைவில் கள ஆய்வு நடைபெறவுள்ளது.

தமிழக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தது. அதன்படி, நடப்பாண்டில் ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை அளிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதியை அரசு ஒதுக்கி, வரும் செப்டம்பர் 15-ம் தேதி, அண்ணா பிறந்த நாளில் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக, இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பதிவு செய்து, பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்டன. முதல்கட்டமாக, ஜூலை 24 முதல், ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மற்றும் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல்,12-ம் தேதி வரையும் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில், 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தில் தகுதி வாய்ந்த பெண்கள், மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இவர்களுக்காகவும், முந்தைய முகாம்களில் பதிவு செய்யாதவர்களின் நலன் கருதியும் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 1,428 ரேஷன் கடைகள் உள்பட, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இம்முகாம்களில் ஆர்வமுடன் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்தனர். முகாம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அரசு தரப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இப்பணிகளுக்கென நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோ அடங்கிய குழு, விண்ணப்பத்தின் அடிப்படையில் தேவைப்படும் பயனாளிகளின் வீடுகளுக்கு மட்டும் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



from India News https://ift.tt/ILwHPhq

Post a Comment

0 Comments