`அதிக ஊழல் புகார்... உள்துறை அமைச்சக ஊழியர்கள் முதலிடம்!' - மத்திய விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கை

மத்திய அரசின் துறைகள் மற்றும் அவற்றின் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடந்த ஆண்டில் மட்டும் பெறப்பட்டுள்ள ஊழல் புகார்களில், எண்ணிக்கையளவில் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீது அதிக புகார்கள் வந்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய ஆண்டறிக்கையில், 2022-ல் மட்டும் மொத்தமாக 1,15,203 புகார்கள் வந்திருக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம்

இதில், 85,437 தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 29,766 புகார்கள் நிலுவையிலேயே இருக்கின்றன. அவற்றில் 22,034 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன. இவ்வாறிருக்க, பெறப்பட்ட இந்த மொத்த புகார்களில் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே 46,643 புகார்கள் வந்திருக்கின்றன. இவற்றில், 23,919 தள்ளுபடி செய்யப்பட்டு, 22,724 புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. இதில், 19,198 புகார்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அடுத்தபடியாக, ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக 10,580 புகார்களும், வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8,129 புகார்களும் வந்திருக்கின்றன. இந்தப் புகார்களில், 9,663 புகார்களை ரயில்வே துறையும், 7,762 புகார்களை சம்பந்தப்பட்ட வங்கிகளும் தள்ளுபடி செய்துவிட்டன. இதற்கடுத்தபடியாக, டெல்லியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக 7,370 புகார்களும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4,710 புகார்களும், நிலக்கரி அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4,304 புகார்களும் வந்திருக்கின்றன.

ரயில்வே துறை

மேலும், 4,236 புகார்கள் தொழிலாளர் அமைச்சக ஊழியர்களுக்கு எதிராகவும், 2,617 பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களுக்கு எதிராகவும், 2,150 புகார்கள் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ஊழியர்களுக்கு எதிராகவும் வந்திருக்கின்றன. பின்னர் இதுகுறித்து பேசிய அதிகாரியொருவர், இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க நன்னடத்தை கண்காணிப்புக் குழுவின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மூன்று மாதம் காலக்கெடு நிர்ணயித்தீர்ப்பதாகத் தெரிவித்தார்.



from India News https://ift.tt/SqcjG6B

Post a Comment

0 Comments