மும்பை: தாராவி குடிசை மாற்றுத் திட்டப் பணி; நீண்ட இழுபறிக்கு பிறகு அதானி குழுமத்துக்கு வழங்கிய அரசு!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் மும்பை தாராவியில் உள்ள குடிசைகளை இடித்துவிட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருகிறது. இந்த திட்டத்துக்கு இதற்கு முந்தைய அரசுகள் பல முறை டெண்டர் விட்டு பின்னர் அதனை ரத்து செய்தன.

கடைசியாக மகாராஷ்டிரா கடந்த நவம்பரில் விடப்பட்ட டெண்டரில் அதானி குழுமம் இந்த திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதோடு அதானி குழுமமும் நிதி சர்ச்சையில் சிக்கியது. இதனால் தாராவி குடிசை மாற்றுத்திட்டத்திற்கான பணியை மகாராஷ்டிரா அரசு அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கான கடிதத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. தற்போது அதானி குழுமத்துக்கு தாராவி குடிசை மாற்றுத்திட்டத்தை வழங்குவதற்கான அரசாணையை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டிருக்கிறது. இதனை தாராவி குடிசைப்புனரமைப்பு தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருக்கிறார். அதோடு அதானி குழுமத்துக்கு பணி உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதானி குழுமம்

இத்திட்டத்துக்கு அதானி குழுமம் ரூ.5069 கோடியை டெண்டரில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் மற்றொரு நிறுவனமான டி.எல்.எப். நிறுவனம் ரூ.2025 கோடி என்ற குறிப்பிட்டு இருந்தது. இத்திட்டத்தை முடிக்க 23 ஆயிரம் கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் மகாராஷ்டிரா அரசை உள்ளடக்கிய கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும். அதில் அதானி குழுமத்துக்கு 80 சதவிகிதமும், அரசுக்கு 20 சதவிகிதமும் பங்கு இருக்கும். அதானி குழுமம் 80 சதவிகிதமாக 400 கோடி ரூபாயை கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யும். கூட்டு நிறுவனம் தாராவியில் உள்ள 240 ஹெக்டேர் நிலத்தில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் இலவச வீடுகளை கட்டிக்கொடுக்கவேண்டும். எஞ்சிய நிலத்தில் விற்பனை செய்யக்கூடிய வீடுகளை கட்டி அதானி குழுமம் விற்பனை செய்து கொள்ள வேண்டும். இப்பணிகளை தொடங்க குடிசைவாசிகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மாற்று குடியிருப்புகள் தேவை என்பதால் ரயில்வேயிடம் காலியான நிலத்தை, மாநில அரசு விலைக்கு வாங்கி இருக்கிறது. அந்த நிலத்தில் குடிசைவாசிகளுக்கு தற்காலிக குடியிருப்புகள் கட்டப்படும் எனக் கூறப்படுகிறது.



from India News https://ift.tt/Dk7C25m

Post a Comment

0 Comments