கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்புவிழா... சர்ச்சைகளுக்குப் பின் சேர்க்கப்பட்ட சு.வெங்கடேசன் பெயர்!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம்... தொன்மையான நாகரிகம், ஆன்மிகம், கலை இலக்கிய, அரசியல், பெருமை என பல சிறப்புகளைக் கொண்ட மதுரை மாநகருக்கு கூடுதலாக பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. அதேநேரம் நூலக விழாவுக்கு மதுரையை சேர்ந்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் அமைத்ததுபோல, மதுரையிலும் நூலகம் வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த கல்வியாளர்கள், படைப்பாளிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் காரணமாக, 2021-ல் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து மதுரையின் முக்கியப்பகுதியான நத்தம் செல்லும் சாலையில், 6 தளங்களுடன் மிகப்பெரிய வளாகத்துடன் ரூ. 215 கோடி செலவில் அழகிய வடிவமைப்புடன் பிரமாண்டமாக உருவானது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

வெளிநாட்டு நூலகங்களுக்கு இணையாக, முழுவதும் குளிரூட்டப்பட்ட நவீன மின்னணு தொழில்நுட்ப வசதியுடன் பல்வேறு பிரிவுகளுடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சம் சதுர அடியில் ரூ. 215 கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்த விசாலமான வசதியுடன் பெரிய வளாகத்தின் மையத்தில் நூலகம் இரண்டு பெரிய நுழைவு வாயில்களுடன் அமைந்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

தரைத்தளத்தில் மிகப்பெரிய வளாகத்தில் வரவேற்பரை, மிகப்பெரிய ஹால், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு, மதுரையின் வரலாற்றைக் கூறும் காட்சி அறை, 500 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் அமைந்துள்ளது. முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் அவர்களுக்கான டிஜிட்டல் திரை அரங்கம், அறிவியல் அரங்கம் ஆகியவற்றுடன் கலைஞர் ஆய்வரங்கம், இரண்டாவது தளத்தில் பருவ இதழ்கள், நாளிதழ்கள், 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல்களுக்கான பிரிவும், ஆறாம் தளத்தில் 1990 சதுர அடியில் கூட்ட அரங்கு, ஸ்டுடியோ, டிஜிட்டல் நூலகம், நூலக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு வசதிகளுடன் சிறப்பு வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க இன்று மதுரை வந்தார் முதலமைச்சர்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

விமான நிலையத்தில் அமைச்சர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மாலை 4.30 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து 5.30 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சமீபத்தில் மறைந்த தியாகராஜர் குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் இல்லத்துக்கு சென்று ஆறுதல் சொல்கிறார். பின்பு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர்களும், உயர் அலுவலர்களும் இவ்விழாவுக்கு மதுரையைச் சேர்ந்த கல்வியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளார்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகளை முறையாக அழைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அரசு அழைப்பிதழ்

முக்கியமாக பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு முறையான அழைப்பு இல்லை. அதுபோல் இலக்கியத்துக்காக சாகித்ய அகடாமி விருது பெற்ற எம்.பி-யும், மதுரையில் நவீன நூலகம் அமைக்க நீண்டகாலம் வலியுறுத்தி வந்தவருமான சு.வெங்கடேசன் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. இது குறித்து கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். அதுபோல் மேயர் பெயரும் குறிப்பிடவில்லை. அதே நேரம் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஷிவ் நாடார், ரோஷினி நாடார் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில் நூலகத்தை கட்டிய ஒப்பந்த நிறுவனம் இன்று நாளிதழில் கொடுத்த விளம்பரங்களில் சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ கோ.தளபதி உள்ளிட்டவர்களின் பெயர்களை சேர்த்துள்ளனர். எனினும் மாநகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ள விளம்பரத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பெயர் குறிப்பிடவில்லை. கடைசி நேரத்தில் அவசர அவசரமாக கல்வியாளர், இலக்கியவாதிகள் சிலருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்தால் 'புரோட்டோக்கால்படிதான் அழைப்பிதழ் அடித்துள்ளோம், முக்கிய பிரமுகர்களை அழைத்துள்ளோம்' என்கிறார்கள்.



from India News https://ift.tt/wCl0SLR

Post a Comment

0 Comments