`எடப்பாடி ஒன்றும் அம்மா இல்லை..!’ - மன்னிப்புக் கடித விவகாரத்தில் அப்செட்டில் அதிமுக நிர்வாகிகள்?!

``கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, பின் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர்” என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். இது கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகளை கிளப்பி இருக்கிறது.

இதுதொடர்பாக எடப்பாடி, ``கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அவர்கள் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.

எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்." எனக் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் பன்னீர் உள்ளிட்ட பலருக்கு மறைமுகமாக எடப்பாடி அழைப்பு விடுகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதுதொடர்பாக கொங்கு பகுதி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ``ஒற்றைத் தலைமை போட்டியின் முடிவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பொற்றுப்பேற்றிருக்கிறார். முன்னதாக கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கவுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, பன்னீருடன் நெருக்கமான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், பண்ரூட்டி ராமச்சந்திரன் என பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக பொதுக்குழு

எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து செயல்பட்ட காலகட்டத்தில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். பின்னர் சசிகலா அ.தி.மு.க நிர்வாகிகளை போனில் தொடர்புக் கொண்டு பேசி வந்தார். மேலும், பலர் சசிகலாவை நேரில் சந்தித்தும் வந்தனர். அவர்களும் அவ்வப்போது நீக்கப்பட்டனர். தற்போது அ.ம.மு.க-வின் நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான். அதேபோல, பன்னீரின் தம்பியான ஓ.ராஜா, பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சமீபத்தில் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட நிர்வாகியான முரளியும் நீக்கப்பட்டு இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில்தான், இந்த அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டு இருக்கிறார். இது ஓ.பி.எஸ்ஸுக்கான அழைப்பு மட்டும்தான் எடுத்துக் கொள்ளமுடியாது. அவரை கட்சிக்குள் மீண்டும் கொண்டுவர எடப்பாடிக்கு விருப்பமும் இல்லையென்றாலும், அவரை கட்சிக்குள் கொண்டுவர சீனியர்கள் முயல்கிறார்கள். எனவேதான், செய்த தவறுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தால், கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி, ஜூலை 11-ம் தேதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இதன்மூலம், ஓ.பி.எஸ்-ஸுக்கும் அவரது தரப்புக்கும் மறைமுகமாக சில விஷயங்களை உணர்த்தி இருக்கிறார். அதேபோல, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட சோழவந்தான் மாணிக்கம் இணைந்திருக்கிறார். மேலும், பலர் இணையும் யோசனையில் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்காகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி " என்றனர் விரிவாக...

இதுஒருபுறமிருக்க, மன்னிப்பு கடிதம் கொடுத்தால்தான், கட்சியில் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு தேவையில்லாதது என்று அதிருப்தியை தெரிவிக்கிறார்கள் சீனியர் அமைப்பு செயலாளர்கள் சிலர்... தொடர்ந்து நம்மிடம் பேசிவர்கள், "தங்கள் தவறை உணர்ந்தவர்கள்தான் மீண்டும் கட்சிக்குள் வர நினைப்பார்கள். அவர்களை மண்டியிட வைக்கும் நடைமுறை நல்லதல்ல. எம்.ஜி.ஆரும்., அம்மாவும் செய்தார்களென்றால், அவர்களுக்கான இடமென்பது வேறு. அதை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளவில்லையென்றாலும், வேறு வழியும் இல்லை. ஆனால், அதை தொண்டராக இருந்து தலைமைக்கு சென்ற எடப்பாடி பின்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி ஒன்றும் அம்மா இல்லை என்பதை அவரே புரிந்துக் கொள்ளவேண்டும். கட்சியை தனது கட்டுக்குள் வைக்க ஆரம்பத்தில் இருந்தே முயற்சி செய்யும் எடப்பாடி, இதுபோன்ற சர்வதிகார போக்குகளால் திசை மாறவும் வாய்ப்பு இருக்கிறது. நிர்வாகிகளை அரவணைத்து செல்வதுதான் அவருக்கான ஸ்டைல். இதுபோன்ற நடவடிக்கைகள் அவரை இயல்பை மாற்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியை பலப்படுத்த, விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்கும் பொறுப்பு எடப்பாடிக்கு இருக்கிறது. ஆனால், சர்வதிகார போக்கு கட்சிக்கும், அவருக்கும் நல்லதல்ல." என்றனர்...

புகழேந்தி

இதுகுறித்து பன்னீர் தரப்பின் ஒருங்கிணைப்பாளரான பெங்களுரூ புகழேந்தியிடம் கேட்டபோது, "ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமையில் செயல்படுவதுதான் உண்மையான அ.தி.மு.க. எடப்பாடி மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் அவரை நாங்கள் கட்சியில் சேர்ப்பதாக இல்லை. குறிப்பாக, எம்.ஜி.ஆரும், அம்மாவும் இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிட்டது இல்லை. இவராக தன்னை பெரிய ஆள் என நினைத்து, இதுபோன்ற காமெடி அறிக்கைகளை வெளியிடுகிறார். அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை." என்றார்.



from India News https://ift.tt/8oXnC2g

Post a Comment

0 Comments