மேற்கு வங்கமும் வன்முறையும் பிரிக்க முடியாதவை என்று சொல்லும் அளவுக்கு அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்குரிய ஒன்றாக இருந்துவருகிறது. மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி கடந்த ஜூன் 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே வன்முறை சம்பவங்கள் தொடங்கிவிட்டன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் வன்முறைக்கு காரணம் என்று பா.ஜ.க., காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
ஆனாலும், 2011-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். காரணம், மாநிலம் முழுவதும் வன்முறை நிகழ்ந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் செல்வாக்கு மிக்க கட்சி திரிணாமுல் காங்கிரஸ்தான் என்பதை இந்தத் தேர்தலில் அவர் உறுதிசெய்துவிட்டார்.
எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க., அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வால், தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரியளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை.
பாரத் ஜோடோ யாத்திரை, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் இடங்களைப் பெற முடியவில்லை.
அதேபோல, மேற்கு வங்கத்தை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணியாலும், இந்தத் தேர்தலில் ஓரளவுக்குத்தான் இடங்களைப் பிடிக்க முடிந்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படாததும், ஆளும் கட்சியினர் வன்முறையில் வெறியாட்டத்தில் ஈடுபட்டதாலும்தான், திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றிருக்கிறது என்று எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைகளை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, வன்முறை தொடர்பான தகவல்களைத் திரட்டிவருவதாக செய்திகள் கூறுகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கடந்த ஒரு மாதத்தில் 45 பேர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள். தேர்தல் நடைபெற்ற நாளன்றே, மாநில ஆளுநர் ஆனந்த போஸை தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவரங்களைக் கேட்டறிந்திருக்கிறார். அதுதவிர, ஆளுநர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார்.
பா.ஜ.க-வின் எம்.பி-க்கள் குழு ஒன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கிறது. இதன் தாக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரியவரும் என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.
தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்துவருகின்றன. பாட்னா கூட்டத்துக்கு அடுத்தபடியாக, தற்போது பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடவிருக்கிறார்கள். இந்த நேரத்தில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையேயும் மோதல் நடைபெற்றிருக்கிறது.
அதேபோல, திரிணாமுல் காங்கிரஸாருக்கும் சி.பி.எம் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றிருக்கிறது. இந்த மோதல்களில் எல்லா தரப்புகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது மோதிக்கொண்ட தொண்டர்களால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று சேர்ந்து பணியாற்ற முடியுமா? பா.ஜ.க-வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றியும் பேசப்பட்டுவருகிறது. ஒருவேளை, அப்படியொரு சூழல் உருவானால், மேற்கு வங்கத்தில் அதை செயல்படுத்த முடியுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஆனால், மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை, மேற்கு வங்கம் தன் கையைவிட்டுப் போய்விடக்கூடாது என்று நினைக்கிறார். அது மட்டுமே அவருக்கு முக்கியம். அந்த வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அவர் மற்ற அனைத்தையும் விட பெரிதாக பார்க்கிறார்.!
from India News https://ift.tt/gukDG4X
0 Comments