நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10-வது ஆண்டாக ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிர்வரிசையில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும், அடுத்த ஆண்டிலாவது பா.ஜ.க-வை எதிர்வரிசையில் வைத்துவிட்டு ஆளும் வரிசையில் தாங்கள் அமர வேண்டும் என்று முனைப்பு காட்டிவருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, `பா.ஜ.க அல்லாத மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகளை ஆளுநர்கள் மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மத்திய பா.ஜ.க மிரட்டுகிறது' என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூட, `எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை தான் ஒன்றிணைக்கிறது’ என்றார்.
இதனால் இனியும் தாமதிக்காமல் 2024-ல் பா.ஜ.கவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அதில் முதற்கட்டமாக ஜூன் மாதம், பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் விரிவான இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் காங்கிரஸ் தலைமையில் நேற்று தொடங்கியது. இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டமான இதில் முந்தைய கூட்டத்தை விடவும் அதிகமாக, அதாவது மொத்தம் 26 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன.
முதல் ஆலோசனைக் கூட்டத்தில் சில காரணங்களால் கலந்துகொள்ளாத சோனியா காந்தி, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இரவு சிறப்பு விருந்து அளித்தார். அதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் மற்றும் 2024 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மட்டும் தான் இவ்வாறு 2024 தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகிறதா என்று பார்த்தால், அதுதான் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் ஜூலை 18-ல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடத்தப்போவதாக பா.ஜ.க-வும் அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் அதேநேரத்தில், டெல்லியிலும் பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஆளும் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமாக 38 கட்சிகள் பங்கேற்கவிருப்பதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருக்கிறார்.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அறிவித்த ஜே.பி.நட்டா, ``மோடி அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் தாக்கமே தேசிய ஜனநாயக கூட்டணியின் விரிவாக்கத்துக்கு காரணம். பா.ஜ.க மட்டுமே, அது உருவானதிலிருந்து சித்தாந்த ரீதியாக பிரச்னைகளைப் பின்தொடர்கிறது. அது ராமர் கோயிலாக இருந்தாலும் சரி, பிரிவு 370-ஆக இருந்தாலும் சரி. எதிர்க்கட்சிகள் கூட்டம் சுயநலத்தின் அடிப்படையிலானது. அதற்கு ஒரு தலைவரோ, கொள்கையோ, முடிவெடுக்கும் அதிகாரமோ இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த ரூ.20 லட்சம் கோடி ஊழல் மீதான நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக ஒன்றிணைந்த கட்சிகளின் எதிர்க்கட்சிகள் கூட்டணி இது. எதிர்காலத்தில் அவர்கள் அதிக சமரசங்களைச் செய்வார்கள்" என்று கூறினார்.
டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழிககத்திலிருந்து அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கலந்துகொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/7A4R9dv
0 Comments