மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்துக்கும், குக்கி உள்ளிட்ட பழங்குடி சமூகத்துக்கும் இடையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலவரம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட உயிர்கள் இந்தக் கலவரத்தில் பலியாகியிருக்கின்றன. ஏராளமான வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிந்து நாசமாகியிருக்கின்றன. கர்நாடக தேர்தல் சமயத்தில் தான் மணிப்பூரில் கலவரம் வெடிக்கத்தொடங்கியது.
ஆனால் அப்போது கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டிய பிரதமர் மோடி, இப்போது வரை மணிப்பூருக்குச் செல்லவில்லை. மாறாக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரட்டை எஞ்சின் அரசு என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க-வும் தற்போது அடுத்தகட்டமாக 2024 தேர்தல் கூட்டணி வேலைப்பாடுகளில் இறங்கிவிட்டது.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றவரான மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு, தன்னுடைய சொந்த மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக மோடிக்கு ட்விட்டரில் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்த மீராபாய் சானு, ``மணிப்பூரில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கலவரம் மூன்று மாதங்களை நிறைவு செய்யப்போகிறது. ஆனாலும், மாநிலத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை.
இந்தக் கலவரத்தால் விளையாட்டு வீரர்கள் பலரும் பயிற்சி பெறமுடியவில்லை. மேலும் குழந்தைகளின் படிப்புக்கும் கலவரம் இடையூறாக இருக்கிறது. கலவரத்தில் பலர் உயிரிழந்துவிட்டனர். பல வீடுகள் எரிந்துவிட்டன. எனவே இந்தக் கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், மணிப்பூர் மக்கள் அனைவரையும் காப்பாற்றவும், மாநிலத்தில் முன்பு நிலவிய அமைதியை மீட்டெடுக்கவும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மணிப்பூரில் எனக்கு வீடு இருக்கிறது. ஆனால் வரவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அமெரிக்காவில் நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன். அதேமயம் மணிப்பூரில் நான் இல்லாவிட்டாலும், இந்தக் கலவரம் எப்போது முடிவுக்கு வரும் என்று தான் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
from India News https://ift.tt/FLNpw8A
0 Comments