தடரம NCERT சரசச: எஙகள பயர நககஙகள..!' - பரககட தககம ஆசரயரகள- எனன கரணம?

`மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களைத் தவிர்த்து, சுமையாக இருக்கும் பாடப்பகுதிகளை நீக்குகிறோம்' என்று கூறி பல்வேறு பாடங்களை நீக்கிவருகிறது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான NCERT. இந்த நிலையில், பாடப் புத்தகங்களைத் தயாரித்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தப்பட்ட NCERT புத்தகங்களில் தங்கள் பெயர் இருப்பது சரியல்ல; அதை நீக்குங்கள் எனக் கூறி எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கின்றனர்.

NCERT

நீக்கப்பட்ட பாடங்கள்:

கொரோனா பரவலால் ஏற்பட்ட மாணவர்களின் படிப்புச்சுமையைக் காரணம்காட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) தங்கள் புத்தகங்களில் இடம்பெற்றுவந்த பல்வேறு பாடங்களை நீக்கிவருகிறது. பெரும்பாலும் இஸ்லாமியர்கள், முகலாயர்கள், டார்வினின் பரிணாமக் கோட்பாடு, ஜனநாயகம், குஜராத் கலவரம் போன்ற பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இது மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட சதிச்செயல் என தொடக்கம் முதலே பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, NCERT-ன் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16, 17-ம் நூற்றாண்டுகள்) என்ற பாடம், வரலாற்றுப் (இந்திய வரலாறு - பகுதி II) புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. அதேபோல, இந்தி புத்தகத்திலிருந்த உருது கவிதைகளும் நீக்கப்பட்டன. மேலும், அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் ஒன்றான `சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் அரசியல்' என்ற புத்தகத்திலிருந்த `மக்கள் இயக்கங்களின் எழுச்சி', 'தனிக்கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்' ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டன. இந்த அத்தியாயங்களில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கம் போன்றவை இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர, அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்திலிருந்த 2002 குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டன.

NCERT Periodic Table Lesson

அதேபோல, பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி, கலாசார மோதல் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல், பத்தாம் வகுப்பு உயிரியல் பாடப்புத்தகங்களிலிருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டன. மேலும், அறிவியல் வேதியியலின் அடிப்படை பாடத்திட்டங்களில் ஒன்றான 108 படிமங்கள் அடங்கிய 'படிம அட்டவணை'யும் நீக்கப்பட்டது. அப்போதே இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த 4,000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து, NCERT அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பினர். NCERT ஆலோசகர்களாக இருந்த யோகேந்திர யாதவ், சுஹாஸ் பால்ஷிகர் போன்றோர் தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவிலிருந்தே விலகினர். மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

NCERT

அப்போது, பதிலளித்த NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி, ``தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்படி நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுவதைத்தான் நாங்கள் அமல்படுத்துகிறோம். எதிர்க்கட்சிகள் கூறுவதெல்லாம் பொய்!" என விளக்கமளித்தார்.

பெயர் நீக்கம் கோரிய ஆசிரியர்கள்:

இந்த நிலையில், `பாட புத்தகத் தாயாரிப்புக் குழுவிலிருந்து எங்கள் பெயர்களை நீக்க வேண்டும்' எனக் கோரி தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூட்டாக இணைந்து, NCERT இயக்குநர் தினேஷ் சக்லானிக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில், ``முன்பு இருந்த அசல் புத்தகத்திலிருந்து பல்வேறு பாடங்களை நீக்கி பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அந்த திருத்தங்கள் தற்போது அந்தப் புத்தங்களை வேறொன்றாகக் காட்டுகின்றன. எனவே அவை நாங்கள் உருவாக்கிய புத்தகம் என்று கூறி அவற்றை எங்கள் பெயருடன் இணைப்பது சரியானதாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம்.

NCERT பாடப்புத்தகம்

இதனால் எங்கள் ஆக்கபூர்வமான கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அந்தப் பாட புத்தகங்கள் பல்வேறு பின்புலம் மற்றும் கருத்தியல்களில், அரசியல் செயற்பாட்டாளர்களின் விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டவை. அவை இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயக செயல்பாடு மற்றும் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களுடன் சர்வதேச வளர்ச்சி மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய கோட்பாடு அறிவினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை. எனவே, எங்கள் பெயர்களை நீக்குவதே சரியானதாக இருக்கும்!" என்று கூறியிருக்கின்றனர்.

தினேஷ் பிரசாத் சக்லானி

அந்தக் கடிதத்தில் அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் அரசியல் அறிஞருமான பிரதாப் பானு மேத்தா, டெல்லி பல்கலைக்கழகத்தின் ராதிகா மேனன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிவேதிதா மேனன், காந்தி பிரசாத் பாஜ்பாய், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் முன்னாள் ஜே.என்.யூ பேராசிரியருமான ராஜீவ் பார்கவா, மாலினி கோஸ், முசாபர் அசாதி, சைத்ரா ரெட்கர், ராஜேஷ் தேவ், பீட்டர் ரொனால்ட் டிசோசா உள்ளிட்ட 33 ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, தங்களின் கோரிக்கையையும் எதிர்ப்பையும் பதிவுசெய்திருக்கின்றனர்.

NCERT

NCERT கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் NCERT விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``பதிப்புரிமை உரிமையின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்ய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு உரிமை உண்டு. மேலும், கவுன்சிலின் முடிவுகள் உறுப்பினர்களின் கேள்விக்கு அப்பாற்பட்டது!" எனத் தெரிவித்திருக்கிறது.



from India News https://ift.tt/up7BqVn

Post a Comment

0 Comments