சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சருகனியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் விஜய்க்கு கல்வித்துறை சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாடப்புத்தகத்தில் அனைத்து தலைவர்களின் பாடங்கள் இடம்பெற்றிருப்பதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்விதமாக, இந்த ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரைப் பற்றி `திராவிட மொழிக் குடும்பம்' என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
வரும் ஆண்டில் முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஒப்புதலுடன் `செம்மொழி நாயகன் கலைஞர்' என்ற தலைப்பில் முழுப்பாடமும் இடம்பெறவிருக்கிறது" என்றார்.
அவரிடம், 'பெரியாரை ஹெச்.ராஜா விமர்சித்திருக்கிறார்?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அடித்தட்டு மக்களும் இன்று உரிமையுடன் தலைநிமிர்ந்து நடப்பதற்கு பெரியார்தான் காரணம். பெரியார் ஒரு பெரிய சமூக சீர்திருத்தவாதி, அவரை விமர்சிப்பவர்கள் பிற்போக்குவாதிகள்.
பெரியாரின் கொள்கைகள் என்றும் நிலைத்திருக்கும். மேலும் அமைச்சரவை மாறுதலை நிராகரித்தது, தமிழக ஆளுநரின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. ஆளுநர் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும், அதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார்" என்றார்.
from India News https://ift.tt/ZlUIQKB
0 Comments