``கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது குழந்தைகளுக்கு நல்லது!" - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், `கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது' என்று கூறியிருக்கிறார்.

கர்ப்பிணி

தொழில்முறையில் மருத்துவரான சௌந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்' திட்டத்தை மெய்நிகர் மூலம் நேற்று தொடங்கிவைத்தார். இந்த திட்டமானது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயது வரை பகவத் கீதை, ராமாயணம் போன்ற மத நூல்களைப் படித்தல், சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

இந்த நிலையில் கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை நேற்று தொடங்கிவைத்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ``கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உட்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைக் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது" என்று கூறினார். சுந்தரகாண்டம் என்பது ராமாயணத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/MHXJlv4

Post a Comment

0 Comments