பக்தர்கள் மீது தடியடி: `மொகலாயர்களின் மறுபிறவி’ என ஷிண்டே அரசை சாடிய எதிர்க்கட்சிகள்!

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் உள்ள வித்தல் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாதி ஏகாதசிக்காக மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்த ஆண்டு ஆஷாதி ஏகாதசி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பக்தர்களின் பாதயாத்திரை நேற்று தொடங்கியது. இந்த பாதயாத்திரை செல்லும் பக்தர்களை வர்காரி பக்தர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த யாத்திரை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் போது வழியில் உள்ள கோயில்களில் வழிபட்டு செல்வது வழக்கம்.

நேற்று புனே அருகில் உள்ள ஆலண்டி என்ற இடத்திற்கு வர்காரி யாத்திரை சென்ற போது அங்குள்ள ஷேத்ரா ஆலயத்தில் சென்று வழிபாடு நடத்தும் போது பக்தர்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோயில் வளாகத்திற்குள் 75 பக்தர்கள்தான் அனுமதிக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் 400 பேர் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினர். கடந்த ஆண்டே இதே கோயிலில் வர்காரி பக்தர்கள் வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனவேதான் இந்த ஆண்டு கோயில் வளாகத்திற்குள் ஒரே நேரத்தில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதோடு தடுப்புக்களும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பக்தர்கள் போலீஸாரின் தடுப்பை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். எனவே பக்தர்கள் மீது போலீஸார் விரட்டி விரட்டி தடியடி நடத்தினர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ``ஒரே நேரத்தில் 500 பேர் உள்ளே செல்ல முயன்றனர். பாஸ் முறையை பின்பற்ற மறுத்தனர். பக்தர்கள் போலீஸ் தடுப்பை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற போது போலீஸார் தடுக்க முயன்றனர். இதில் சில போலீஸாரும் காயம் அடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார். வர்காரி பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தேவேந்திர பட்னாவிஸ்

இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ``இந்துத்துவா அரசின் பாசாங்கு வெளிப்பட்டுள்ளது. அவர்களின் முகமூடி கிழிந்தது. மகாராஷ்டிராவில் மொகலாயர்கள் மறுபிறவி எடுத்துள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பாலும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் போலீஸாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.



from India News https://ift.tt/a0zmYUi

Post a Comment

0 Comments