விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் மோதல்; பொருள்கள் உடைப்பு - என்ன நடந்தது?

விருதுநகர்-மதுரை சாலையில் விருதுநகர் மாவட்ட சிறை உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம், விருதுநகர் மேற்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், காவலர் குடியிருப்பு ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற இந்த வளாகத்தில் மாவட்ட சிறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட சிறை மொத்தம் 10 அறைகளில் 160 கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி கொண்டது. ஆனால் தற்போது இந்த சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, கைதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இடவசதிக்காக நேற்று இரவு ஒரு அறையிலிருந்து, மற்றொரு அறைக்கு கைதிகளை மாற்றுவதற்கு சிறை அதிகாரிகள் முடிவுசெய்தனர். அதன்படி, சிறைக்கைதிகளை அறை மாற்றியபோது, கைதிகளுக்குள் இருதரப்பினருக்கு இடையே சாதி ரீதியாக மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைதிகள்

இந்த மோதலில் சிறை வளாகத்துக்குள் இருந்த பொருள்கள் யாவும் அடித்து நொறுக்கப்பட்டு கைதிகளுக்குள் பயங்கர அடிதடி ஏற்பட்டிருக்கிறது. சத்தம்கேட்டு வந்த சிறை அதிகாரிகள், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த மோதலில் காயமடைந்த சிறைகைதிகள் 3 பேர், விருதுநகர்‌ மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்ட தகவலறிந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் நேற்று நள்ளிரவே விருதுநகர் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கைதிகளுக்குள் மோதல் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்காக முக்கிய கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

மாற்றம்

விருதுநகரில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து, மாவட்ட சிறை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.



from India News https://ift.tt/7YCOmAD

Post a Comment

0 Comments