கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் வெற்றிபெற நம்பிக்கையளித்திருந்தாலும்கூட, காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்குமிடையிலான மோதல் இன்னும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.
இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இதற்கு முடிவுகட்டும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அசோக் கெலாட்டையும், சச்சின் பைலட்டையும், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரில் தனது இல்லத்துக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். அசோக் கெலாட்டும், `நாங்கள் இருவரும் ஒன்றாகத் தேர்தலைச் சந்தித்தால் மீண்டும் ஆட்சியமைப்போம்' என்று கூறியிருந்தார்.
ஆனால், சச்சின் பைலட் தரப்பிலிருந்து எந்தவொரு பேச்சுமே வரவில்லை. மாறாக, சச்சின் பைலட் தன்னுடைய தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவுநாளை முன்னிட்டு ஜூன் 11-ல் புதிய கட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள்தான் வெளியாகின. அதையடுத்து உடனடியாக கே.சி.வேணுகோபால், யாரும் அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினார். இப்படியான சூழலில் ராஜேஷ் பைலட்டின் நினைவுநாளான இன்று தௌசாவில் சச்சின் பைலட் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சச்சின் பைலட், ``இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்துக்காக நான் குரல் கொடுத்தேன். இங்குள்ள மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். என்னுடைய குரல் பலவீனமானது அல்ல. ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன், இந்த நாட்டுக்கு உண்மையான அரசியல் தேவை. இளைஞர்களின் எதிர்காலத்துடன் பிறர் விளையாடுவதை நான் விரும்பவில்லை. என்னுடைய கொள்கை தெளிவாக இருக்கிறது. தூய்மையான அரசியலே எனக்கு வேண்டும்" என்றார். கடைசிவரை, புதிய கட்சி தொடங்கப்போவதாக எழுந்த பேச்சுகள் குறித்து சச்சின் பைலட் எதுவும் தெரிவிக்கவில்லை.
from India News https://ift.tt/wdbgf0k
0 Comments