``கடந்த 75 ஆண்டுகளில் மோடி போன்ற திமிர்பிடித்த பிரதமரை இந்தியா பார்த்ததில்லை" - கெஜ்ரிவால் தாக்கு!

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையில் அரசு நிர்வாக அதிகாரம் தொடர்பாக மோதல்போக்கு நிலவும் சூழலில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்துக்கு கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அந்த அவசரச் சட்டத்தில், குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக அரசு

சரியாக திரௌபதி முர்மு இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளன்றுதான், டெல்லி தொடர்பான வழக்கு ஒன்றில், `ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்க வேண்டும். குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு' என உச்ச நீதிமன்றம் கூறியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மத்திய அரசு இவ்வாறு அவசரச் சட்டம் கொண்டு வந்தது முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரிவந்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணி ஏற்பாடு செய்தார். பேரணியில் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய கெஜ்ரிவால், ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போது மோடி ஏற்கவில்லையோ அப்போதே இது ஹிட்லரிசம்தான். `எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை, இனி டெல்லிக்குள் சர்வாதிகாரம்தான் ஓடும். மக்களைவிடவும் துணைநிலை ஆளுநர்தான் உயர்ந்தவர்' என்று மோடியின் இந்த அவசரச் சட்டம் கூறுகிறது.

கெஜ்ரிவால்

நாட்டின் அரசியலமைப்பையே மோடி மாற்றியிருக்கிறார். டெல்லி மக்களை அவர்கள் (பா.ஜ.க அரசு) அவமதித்திருக்கின்றனர். கடந்த 75 ஆண்டுகளில் மோடியைப் போன்ற ஒரு திமிர்பிடித்த பிரதமரை இந்த நாடு பார்த்ததில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அடிபணிய மாட்டேன் என்று மோடி கூறுகிறார். இதுதான் சர்வாதிகாரம். டெல்லிதான் முதலில் தாக்கப்படுகிறது.

மோடி

விரைவில் மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற அவசரச் சட்டம் கொண்டுவருவார்கள். இந்தப் போக்கு இத்தோடு நிறுத்தப்பட வேண்டும். எனவே, நாட்டில் இத்தகைய சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நகர்வு இங்கிருந்து தொடங்கவேண்டும்" என்று கூறினார்.



from India News https://ift.tt/l8YAFsk

Post a Comment

0 Comments