’ரொம்ப சீன் போடாதே தம்பி!’ - கனிமொழியிடம் மனு கொடுக்க வந்த பாஜக கவுன்சிலர்... கடுகடுத்த கீதா ஜீவன்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளம், துறையூர் ஆகிய கிராமங்களில்  தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா மற்றும் கிழவிபட்டி, துறையூரில் மக்கள் குறைகள் கேட்கும் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். மேலும் மக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

மனு அளித்த விஜயகுமார்

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை கனிமொழி திறந்து வைத்தார். அப்போது, கோவில்பட்டி நகராட்சியின் 20-வது வார்டு உறுப்பினரான பா.ஜ.க-வைச் சேர்ந்த விஜயகுமார், தனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து கனிமொழியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட கனிமொழி, `உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இருந்தபோதிலும் விஜயகுமார், தொடர்ந்து தன்னுடைய வார்டு பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருந்தார்.  

“என்னோட வார்டுல 1,532 வாக்குகள், போன எம்.பி., எலக்‌ஷன்ல  விழுந்திருக்கு. எனவே குடிநீர் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தொடர்ந்து பேசியதால் அங்கு  சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க-வினர் விஜயகுமாருடன் வாக்குவாதம் செய்ய முற்படவே அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போலீஸார், விஜயகுமாரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயகுமார்

இருந்தபோதிலும் விஜயகுமார் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அமைச்சர் கீதாஜீவன், “ரொம்ப சீன்  போடதே தம்பி” என கோபத்தில் பேசினார். இந்த நிலையில், சம்பவம் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”கோவில்பட்டி நகராட்சி 20-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் பா.ஜ.க-வின் திரு.விஜயகுமார் அவர்கள். கடந்த நான்கரை வருடங்களாக அவரது பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது என்றும், அவர் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களிடம் மனு கொடுக்க முயன்றிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான சகோதரர் விஜயகுமார் அவர்களை, தி.மு.க அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார். தி.மு.க உட்கட்சி அரசியலில், தன்னை கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமைச்சர், இந்த ஆணவத்தை எல்லாம் அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிரச்னைக்காக, நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுப்பதைத் தடுக்க நீங்கள் யார்... ஒரு வார காலத்துக்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால், பா.ஜ.க-வின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/QqItxN9

Post a Comment

0 Comments