2014-ல் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க அரசு முழுமையாக ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர் பா.ஜ.க-வினர். இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியை, ஒன்பதே ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ.155 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் (Supriya Shrinate), ``தற்போதைய பொருளாதார நிலைக்கு மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகமே காரணம். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அரசியலில் எதிர்பக்கம் இருந்தவர்களைத் திறமையற்றவர்கள், ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டினார். ஆனால் இன்று அவருக்கும், அவரது அரசாங்கத்தும் இதைவிட சரியான சொற்கள் இருக்க முடியாது.
2014-ல் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் கடன் ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. அதாவது, 67 ஆண்டுகளில் 14 பிரதமர்களின் கீழ் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி மட்டும் ரூ.100 லட்சம் கடனை ஏற்படுத்தி தற்போது நாட்டின் மொத்த கடனை ரூ.155 கோடியாக உயர்த்தியிருக்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையைச் சீரழித்து, மிகப்பெரிய அளவில் வேலையின்மையை உருவாக்கி, பணவீக்கத்தை அதிகரித்திருக்கிறது இந்த மோடி அரசு.
ரூ.100 லட்சம் கோடி கடன் என்பது மிகவும் ஆபத்தான அளவு. பொருளாதார மேலாண்மை என்பது ஊடக தலையங்க மேலாண்மை போன்றது அல்ல. இதை டெலிப்ராம்ப்டர்கள் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ செய்ய முடியாது. எனவே நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஏனெனில் இதில் நடக்கும் தவறுகள் இன்னும் ஆழமாகி வருகின்றன" என்று கூறினார்.
from India News https://ift.tt/0nWeV6F
0 Comments