சேலம் புதிய பேருந்து நிலையம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சீரமைத்துக் கட்டப்பட்டது. புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பேர் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் மக்களின் பயன்பாட்டிலுள்ள பேருந்து நிலையத்தில், பயணிகள் அமருவதற்கான நாற்காலிகள் இல்லை. ஏற்கெனவே இருந்த நாற்காலிகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், உள்ளே பெட்டிக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக மக்கள் அதிகம் பயணிக்கக்கூடிய திருச்சி, கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கான பேருந்து நிறுத்துமிடத்திலிருந்த நாற்காலிகள் அனைத்தையும் எடுத்துவிட்டு, உள்ளே சாப்பாட்டு கடை, மொபைல் கடை போன்றவற்றுக்கு இடம் வழங்கியிருக்கின்றனர். பயணிகள் உட்காருவதற்குத்தான் இடம் இல்லை என்றால், நடப்பதற்கும் வழி இல்லாமல் இருந்து வருகிறது. காரணம் பிளாட்ஃபார்ம் முழுவதும் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றன.
இது குறித்து பா.ஜ.க பிரமுகர் சிவராமனிடம் பேசியபோது, “அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் கடைகளை குத்தகை எடுத்து உள்வாடகைக்கு விட்டு வருகின்றனர். அதுவும் பிளாட்ஃபார்மில் பயணிகள் நடப்பதற்குக்கூட நடைபாதை இல்லாமல் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றனர். சராசரியாக ஒரு பேருந்து மார்கத்துக்கு 50 நாற்காலிகளாவது இருக்க வேண்டும். ஆனால் இருந்த நாற்காலிகளையும் எடுத்துவிட்டு கடைகள் போட்டிருக்கின்றனர். மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட கடைகளின் அளவை மீறியும் கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அரசு அனுமதியோடு வைக்கப்பட்டவையா என்பது தெரியவில்லை. மேலும் பேருந்து நிலையத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாயிலிருந்து சாப்பாட்டுக் கடைகளுக்குத் தண்ணீரை டியூப் போட்டு பயன்படுத்துகின்றனர்.
பேருந்து நிலையத்துக்குள் விற்கப்படும் பொருள்களின் விலை எம்.ஆர்.பி விலையைவிட மிகவும் கூடுதலாக இருக்கின்றன. அதையும் தாண்டி மாநகராட்சி கட்டணக் கழிப்பிடத்தில் நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கின்றனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்” என்றார்.
இது குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட புகார் குறித்து அதிகாரிகளை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அனுமதி பெறாத கடைகள்மீது உடனே நடவடிக்கை எடுக்கச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.
from India News https://ift.tt/TtAhYmp
0 Comments