``பாஜக-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் எழுந்ததே திராவிட நிலத்தில் தான்" - ஸ்டாலின் மீது வானதி தாக்கு!

கர்நாடாவில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை வென்று பாஜக-வை வீழ்த்தியது. இதனை காங்கிரஸ் மட்டுமல்லாது, பாஜகவின் எதிர்க்கட்சிகள் பலவும் கொண்டாடிவருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட, ``திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் திராவிட நிலப்பரப்பில் தான் தோன்றியது என்றும், தமிழ்நாட்டில் முதலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது தி.மு.க தான் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

வானதி சீனிவாசன்

அந்த அறிக்கையில், ``கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. 66 தொகுதிகளில் வென்று பலமிக்க எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. 1951-ல் 'பாரதிய ஜனசங்கம்' தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பா.ஜ.க சந்தித்த தோல்விகளை, நெருக்கடிகளை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால், ஜனநாயகத்திற்கு எதிராக, சமத்துவத்திற்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக, கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் ஒரே குடும்பத்திலிருந்து பிறப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் காங்கிரஸும், தி.மு.க போன்ற மாநில கட்சிகளும் கர்நாடகத்தில் பா.ஜ.க-வுக்கு கிடைத்த தோல்வியை கொண்டாடி வருகின்றன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ``பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டார்கள். திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. 2024 பொதுத் தேர்தலில் வெல்ல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" என தெரிவித்திருக்கிறார். மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அவரின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக

இந்திரா காந்திக்கு தனிப்பெரும்பான்மை இருந்தபோது இன்றைய முதல்வர் ஸ்டாலின் சிறையில் இருந்தார். ராஜீவ் காந்தி தனி பலத்துடன் ஐந்தாண்டுகள் ஆண்டபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தன. இந்திரா, ராஜீவ் காலத்து 'முரசொலி' இதழ்களை மட்டும் மீண்டும் படித்து பார்த்தால், பா.ஜ.க பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்று ஸ்டாலின் ஒருபோதும் சொல்ல மாட்டார். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது என்று ஸ்டாலின் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அவருக்கு வரலாற்றின் சில பக்கங்களை நினைவூட்ட விரும்புகிறேன்.

1925-ல் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), அடுத்த 10 ஆண்டுகளிலேயே கர்நாடகம், கேரளத்தில் வலுவாக காலூன்றியது. வடக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸை ஏற்கும் முன்பே பெங்களூரு மாநகரமும், கடலோர கர்நாடகமும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பெரும் ஆதரவளித்தன. 1948-ல் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். மீது வீண்பழி சுமத்தி தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அன்றைய தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், கோல்வால்கரின் சாதுர்யத்தால் நீதிமன்றங்களில் உண்மையை நிலைநாட்டியதும், ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அன்றைய காங்கிரஸ் அரசு நீக்கியது.

ஆர்.எஸ்.எஸ்

தடை நீக்கப்பட்டாலும் ஆர்.எஸ்.எஸ், அமைப்பில் இணைந்து செயல்பட பலரும் முன்வரவில்லை. ஆர்.எஸ்.எஸ் என்றாலே ஒருவித அச்சம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் வட மாநிலங்களில் கூட ஆர்.எஸ்.எஸ்ஸால் நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்த முடியவில்லை. ஆனால், பெங்களூரு மாநகரிலும், மங்களூரு, உடுப்பி போன்ற கர்நாடகத்தின் கடற்கரை பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் நடத்திய கூட்டங்கள், சீருடை அணிவகுப்பில் பல்லாயிரம் பேர் திரண்டனர். கர்நாடகம் தந்த இந்த நம்பிக்கை, உற்சாகத்தில்தான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் மறு உருவாக்கம் செய்துகொண்டது. இப்படி திராவிட நிலப்பரப்பில் இருந்து தான் ஆர்.எஸ்.எஸ் எழுந்தது. அதிலிருந்துதான் பா.ஜ.க-வும் எழுந்தது. கர்நாடகத்தின் தனிப்பெரும் தலைவரான எடியூரப்பாவும், ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து உருவானவர்தான்.

இன்றும்கூட ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் அதிகம் நடப்பது திராவிட நிலப்பரப்பான கர்நாடகம், கேரளத்தில்தான். இதனை கூட்டணி தலைவர்களான கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகத்தின் சித்தராமையாவிடம் கேட்டாலே சொல்லி விடுவார்கள். கர்நாடகத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் 1950-ம் ஆண்டுகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க-வும் செயல்பட்டு வருகின்றன.

கருணாநிதி, ஸ்டாலின்

பலரும் 1998-ல் பா.ஜ.க-வுடன் முதல் முதலில் கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 1970-ம் ஆண்டுகளில் ஜனசங்கத்தின் ஆதரவுடன்தான் மதுரை மாநகராட்சி மேயர் பதவியில் தி.மு.க அமர்ந்தது. அந்த வகையில் பா.ஜ.க-வுடன் முதலில் கூட்டணி அமைத்தது தி.மு.க தான். முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதிதான்.

வானதி சீனிவாசன் - ஸ்டாலின்

திராவிட நிலப்பரப்பில் பா.ஜ.க நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். அதனை ஒரு நாளும் யாராலும் அகற்ற முடியாது என்பதைதான் கடந்தகால வரலாறுகள் காட்டுகின்றன. ஒரு தேர்தலில் தோற்றால், அந்த மாநிலத்திலிருந்து ஒரு கட்சி அகற்றப்படும் என்றால், எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்வரை, எந்தவொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெல்ல முடியாத, 1991, 2011 தேர்தல்களில் படுதோல்வி அடைந்த தி.மு.க-வை என்ன சொல்வது? எனவே திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக அகற்றப்பட்டு விட்டது என யாரும் அற்ப சந்தோஷம் அடைய வேண்டாம். ஏனெனில் பா.ஜ.க எழுந்ததே திராவிட நிலப்பரப்பில் இருந்துதான்'' எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/cLkXAx5

Post a Comment

0 Comments