``குர்ஆன் மத நூல்... பகவத் கீதை மத நூல் கிடையாது" - கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு, கர்நாடகா முழுவதும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பகவத் கீதையை அறநெறிக் கல்வியின் ஒரு பகுதியாக சேர்க்க பரிசீலித்து வருவதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது பகவத் கீதையை பள்ளிகளில் அறநெறி விரிவுரையாக அறிமுகப்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

இதற்கு கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், ``பகவத் கீதை குர்ஆனைப் போன்ற ஒரு மத புத்தகம் அல்ல, அது எந்த மத நடைமுறைகளையும் ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை மாணவர்களுக்கு தார்மீக பாடங்களைத் கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பல உத்வேகத்தை அளித்திருக்கிறது. குர்ஆன் ஒரு மத நூல்.

ஆனால், பகவத் கீதை அப்படியல்ல. கடவுளை வழிபடுவது பற்றியோ, எந்த மதப் பழக்க வழக்கங்களைப் பற்றியோ அதில் பேசவில்லை. அதில் தார்மீக விஷயங்கள் பேசப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே ஒரு குழு பகவத் கீதையை பள்ளியில் பயிற்றுவிப்பது தொடர்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் முதல் அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இருப்பினும், இதைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், போதனைகளின் அடிப்படையில் மட்டுமே வகுப்புகள் அமையும். மேலும், இந்த பகவத் கீதை தொடர்பாக எந்த தேர்வும் இருக்காது”என்று தெரிவித்திருக்கிறார்.

சித்தராமையா

இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ``மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பகவத் கீதை, குர்ஆன் அல்லது பைபிள் கற்பிக்கலாம். ஆனால் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதில் அரசின் முன்னுரிமை இருக்க வேண்டும். அதுவே முதன்மையான முழக்கமாக இருக்க வேண்டும். பள்ளிகளில் புனித நூலை அறநெறிக் கல்வியாகக் கற்பிப்பதில் எங்கள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/eEwkbMt

Post a Comment

0 Comments