கள்ளச்சாராய உயிரிழப்புக்கு முதல்வரை குறை சொல்லக்கூடாது; காவல்துறை மீதுதான்... - கோவன் பேட்டி

``கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும் சமூக போராளிகளும் குரல் கொடுக்கவில்லை என்றும் அதிமுக ஆட்சியில் சாராயம் குறித்து பாட்டு பாடியவர்கள் எல்லாம் இப்போ எங்கே போனார்கள்" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க ஆட்சியில் 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்று டாஸ்மாக்குக்கு எதிராக ஆவசேமாக பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி போராடியது நீங்கள்தான். உங்களைத்தானே எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்? என்று கோவனிடம் நாம் கேட்டபோது,

கோவன்

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்டவருக்கு நாங்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பது எப்படி தெரியும். ஒரு வாரத்திற்கு முன்புகூட அனைத்து வகையான போதை பொருட்களுக்கு எதிராகப் பாடி வீடியோ வெளியிட்டோம். மற்றபடி, கள்ளச்சாரயத்தால் இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காவல்துறையினர்தான் பொறுப்பேற்கவேண்டும். முழுத்தவறும் அவர்கள் மீதுதான் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை முன்னரே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காததால்தான் இத்தனை பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதில், எப்படி தமிழக அரசையும் முதல்வர் மு.க ஸ்டாலினையும் குறைசொல்ல முடியும்? அவரின் விருப்பப்படியா கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்? அதனால், இப்பிரச்சனையில் முதல்வரை குறைசொல்லக்கூடாது.

சமீபத்தில்கூட, 2000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அப்படித்தான், இப்போதும் உயிரிழப்பு ஏற்பட்டவுடன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளார். அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கையும் எடுத்துள்ளார். அதனால், அரசு இந்தப் பிரச்னையை சரியாகக் கையாள்வதாக எனக்குத் தோன்றுகிறது" என்பவரிடம், "இதுவரை 21 பேருக்குமேல் இறந்துள்ளார்களே... ஆட்சி செய்வது தி.மு.கதானே?" என்றேன்.

முதல்வர் ஸ்டாலின்

"தி.மு.கவை எப்படி கண்டிக்க முடியும்? நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டிக்கலாம். அவர்கள்தான் நடவடிக்கை எடுத்துவிட்டார்களே? அதிகாரிகள் மீதும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதை செய்துவிட்டார்கள். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராடுவோம். ஒரு இழப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கக்கூடாது. வருமுன் காப்பதே சிறந்தது என்பதை வலியுறுத்துகிறோம். மதுவைவிட பெரிய போதை மதம்தான். அதையே பெரிய ஆபத்தாகப் பார்க்கிறோம். மது போதையில் இருப்பவரைக்கூட மீட்டுவிடலாம்.

ஆனால், மதபோதையில் இருப்பவர்களை மீட்கவே முடியாது. அதுதான் சவாலானது. இப்போது, 21 பேர் இறந்துள்ளதால் இப்பிரச்சனை வெளியில் தெரிகிறது. கள்ளச்சாராயம், டாஸ்மாக் போன்றவற்றால் இறந்தவர்களைவிட மதவெறியால் இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அது தெரிவதில்லை. எங்களுக்கு மதுவைவிட மதத்தை ஒழிப்பதுதான் முக்கியம்" என்கிறார் அழுத்தமாக.



from India News https://ift.tt/9xwqhRZ

Post a Comment

0 Comments