‘முதல்வர் பதவிக்கு நான் ரெடி’... மூத்த காங்கிரஸ் தலைவர் பேச்சால் குழப்பம்; யார் இந்த பரமேஸ்வரா?

தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடகா மாநில சட்டப்பேரவைத்தேர்தல் கடந்த, 10ம் தேதி நடந்து முடிந்து, 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், ஆட்சி அமைக்க, 113 இடங்கள் தேவை என்ற நிலையில், துவக்கம் முதலே முன்னிலை வகித்த காங்கிரஸ் இறுதியில், 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆளும் பா.ஜ.க வெறும், 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம், 19 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ஜி.பரமேஸ்வரா.

முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநிலத்தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி போட்டி போட்டு வரும் நிலையில், யாருக்கு முதல்வர் பதவி தருவதென முடிவெடுக்க முடியாமல், காங்கிரஸ் மேலிடம் குழப்பக்கடலில் மூழ்கியுள்ளது. இப்படியான நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா, ‘‘காங்கிரஸ் மேலிடம் விரும்பினால், முதல்வர் பதவிக்கு நான் ரெடி,’’ எனக்கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

யார் இந்த ஜி.பரமேஸ்வரா?

கர்நாடகா, தும்கூர் மாவட்டத்தின் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் தான் ஜி.பரமேஸ்வரா. எம்.எஸ்.சி அக்ரி படித்த இவர், 1980களில் காங்கிரஸில் இணைந்து, காங்கிரஸ் சார்பில், மதுகிரி தொகுதியில் நின்று வென்று, 1993ல் பட்டு வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஐந்து முறை எம்.எல்.ஏ, பட்டு வளர்ச்சித்துறை, உயர் கல்வித்துறை, மருத்துவக்கல்வி அமைச்சர், உள்துறை அமைச்சர் என, பலதுறை அமைச்சர் பதவிகள் மட்டுமின்றி, 2018ல் துணை முதல்வர் என, பல பதவிகளை வகித்துள்ளார். கட்சியிலும், தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர், கர்நாடகா மாநிலத்தலைவர் பதவியையும் அலங்கரித்தவர்.

சிவக்குமார் Vs சித்தராமையா.

தற்போதைய தேர்தலில், தும்கூர் மாவட்டம் கொரட்டகிரி தொகுதியில் நின்று வென்றுள்ள ஜி.பரமேஸ்வரா, கர்நாடகத்தில் ‘நன்கு அறிந்த’ முகமாகவும், பெரும் வாக்கு வங்கியை தக்கவைத்துள்ள மூத்த தலைவராகவும் இருந்து வருகிறார். இப்படியான நிலையில், நேற்று, நிருபர்களை சந்தித்து பரபரப்பு பேட்டியை கொடுத்துள்ளார்.

முதல்வர் பதவிக்கு நான் ரெடி...

நிருபர்களிடம், ‘‘எனக்கு முதல்வர் பதவி வழங்க, காங்கிரஸ் மேலிடம் விரும்பினால், முதல்வர் பொறுப்பை ஏற்க நான் ரெடி. எனக்கு ஆதரவு தரும், 50 எம்.எல்.ஏக்கள் கொண்ட குழுவை என்னால் காண்பிக்க முடியும். ஆனால், எனக்கு அரசியல் வாழ்வில் ஒழுக்கம், கொள்கைகள் முக்கியம் என்பதால், நான் அதைச்செய்ய மாட்டேன்.

ஜி.பரமேஸ்வரா.

மேலிடம் எனக்கு பொறுப்பு கொடுத்தால், நிச்சயமாக நான் அதை ஏற்பேன். துணை முதல்வராக இருந்துள்ள என்னைப்பற்றி அனைத்தும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியும்; அதனால், நான் ‘லாபி’ செய்ய விரும்பவில்லை,’’ என, பரபரப்பான பேட்டியை கொடுத்துள்ளார்.

‘லாபி’ செய்ய விரும்பவில்லை என்பதையும், 50 எம்.எல்.ஏக்கள் குழுவை வைத்துள்ளதாக அவர் அழுத்திச்சொல்வது, காங்கிரஸ் மேலிடத்துக்கு மேலுமொரு தலைவலியை உருவாக்கியுள்ளது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என்ற இருமுனை போட்டிக்கு மத்தியில், ஜி.பரமேஸ்வராவின் இந்த முடிவால், முதல்வர் போட்டிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் யார்? என்ற கேள்விக்கு, இன்று மாலை அல்லது, நாளை காலைக்குள் விடை தெரிந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்...



from India News https://ift.tt/kzO9Ubd

Post a Comment

0 Comments