"’தி கிரேட் டிக்டேட்டராக' ஆளுநர் தன்னை நினைத்துக்கொள்ள வேண்டாம்!" - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

தமிழக ஆளுநர் ரவி குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில்‌ ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கலாம்‌. அதை வைத்து அதில்‌ எந்த மசோதவையும்‌ நிறைவேற்றலாம்‌. ஆனால்‌ அதை சட்டமாக்கும்‌ இடத்தில்‌ தான்‌ மாநில ஆளுநரின்‌ பங்கு வருகிறது.'' என்றவர், தொடர்ந்து ``அரசியலமைப்பின்‌ 200-ன்படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள்‌ உள்ளன. ஒன்று மாநில சட்டமன்றம்‌ ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால்‌ அது சரியாக இருந்தால்‌ அதற்கு ஆளுநர்‌ ஓப்புதல்‌ தர வேண்டும்‌. இரண்டாவது, சரியான மசோதா இல்லை என்றால்‌ அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது. நிறுத்தி வைப்பது என்றால்‌ கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்‌ தான்‌ அர்த்தம்‌. இதை உச்ச நீதிமன்றம்‌ பல்வேறு தீர்ப்புகளில்‌ உறுதிப்படுத்தியுள்ளது. நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல்‌ நிறுத்தி வைப்பது என்று அது அழைக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பாக, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்‌ முடிவை ஆளுநர்‌ எடுக்கலாம்‌.”எனத் தெரிவித்திருக்கிறார். ஆளுநரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் ரவி

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின், ``பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின்

இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது.

முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர், 'இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை' என்றார். 'மாநில அரசுக்கே உரிமை உண்டு' என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. ஆனால், 17-10-2022 அன்று ஆளுநராலேயே பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைத் தலைவரால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் 6-3-2023 அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.

இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. 'கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்' என்று பேசி இருக்கிறார். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை - முதல்வர் ஸ்டாலின்

ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.

"Shamsher Singh v. State of Punjab" (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government." என்று சொன்னது. அதாவது, மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு, 'தி கிரேட் டிக்டேட்டராக' தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஆளுநர் ஆர். என். ரவி

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநர் நிராகரிக்க முடியாது. எனவே, ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிருவாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.

எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணமாகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது.

முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் பேசி வருவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நம்புகிறேன்." என்றார்.



from India News https://ift.tt/TwZ8jqf

Post a Comment

0 Comments