உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாமுண்டா தேவி கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்துக்கு மிக அருகில் கோயில் அமைந்துள்ளதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, ரயில் இயக்கமும் பாதிக்கப்படுகிறது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கோயிலை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அந்த கோயில் பூசாரிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், கோயிலை வேறு இடத்துக்கு மாற்ற 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆர்வலர்கள் ஆக்ராவில் உள்ள ரயில்வே துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் பாரத் உறுப்பினர்கள் கோயிலை அகற்றுவதைத் தடுக்க ரயில்வேக்கு எதிராகத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் பாரத் தேசியத் தலைவர் கோவிந்த் பராஷர், "இந்தப் பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு காணப்பட வேண்டும். ரயில் தடங்கள் அமைக்கும் போது ஆங்கிலேயர்கள் கூட கோயிலைத் தீண்டாமல் விட்டுவிட்டனர். அதற்கான சான்றுகள் ரயில் பாதையில் உள்ள வளைவில் காணப்படுகின்றன.
எனவே, இந்திய ரயில்வே தனது முடிவைத் திரும்பப் பெறவில்லை என்றால், ரயில் நிலைய வளாகத்தில் தீக்குளிப்போம்" என்று தெரிவித்தார்.
இந்து ஜாக்ரன் மஞ்ச் முன்னாள் செயலாளர் சுரேந்திர பாகூர், "இந்த கோவில் ரயில்வே ஸ்டேஷனை விடப் பழமையானது, எனவே இதை எப்படி சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்ற முடியும். இந்த செயலுக்கு ஆக்ரா கோட்ட ரயில்வே மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
பா.ஜ.க தலைவரும் அகில இந்திய உலமா வாரியத்தின் மகளிர் பிரிவு தேசியத் தலைவருமான ஷபானா கண்டேல்வால் தலைமையிலான இஸ்லாமிய உறுப்பினர்களும் போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/A3qnVi6
0 Comments