இரவு ஆட்டோவில் சென்ற நடிகையிடம் மோசமாக நடந்த இன்ஸ்பெக்டர்; துறைரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு!

கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகை அர்ச்சனா கவி. இவர் 'நீலத்தாமரை' என்ற மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். அர்ச்சனா கவி கடந்த 23-ம் தேதி கொச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு ஆட்டோவில் திரும்பி உள்ளார். அப்போது இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மட்டஞ்சேரி இன்ஸ்பெக்டர் பிஜூ, ஆட்டோவை நிறுத்தி சோதனை என்ற பெயரில் மோசமான முறையில் நடந்துகொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார் நடிகை அர்ச்சனா கவி. அதிலும், தோழிகளுடன் சென்ற நடிகையை, பாலியல் தொழிலுக்குச் செல்கிறீர்களா என்ற ரீதியில் சந்தேகித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகை அர்ச்சனா கவியின் முகநூல் பதிவு போலீஸுக்கு எதிராக பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. சிலர் இந்த பதிவின் அடிப்படையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் அனுப்பவும் செய்தனர்.

போலீஸ் மீது புகார் கூறிய நடிகை அர்ச்சனா கவி

இதையடுத்து, நடிகையின் அதிருப்தி குறித்து விசாரணை நடத்த கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு உத்தரவிட்டிருந்தார். மட்டஞ்சேரி உதவி கமிஷனர் தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டது. நடிகையிடமும், அவரின் தோழிகளிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், இரவு ரோந்து பணியின் போது நடக்கும் வழக்கமான விசாரணையைத்தான் நடத்தினேன் எனவும் இன்ஸ்பெக்டர் பிஜூ விளக்கம் அளித்திருக்கிறார். இன்ஸ்பெக்டரின் விளக்கம் நடிகை அர்ச்சனா கவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மீடியாக்களிடம் பேசிய நடிகை அர்ச்சனா கவி, "சில நாள்களுக்கு முன் கொச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு சுமார் 11 மணிக்கு நானும் தோழிகளுமாக ஆட்டோவில் திரும்பினோம். ரவிபுரத்தில் இருந்து போர்ட்கொச்சி நோக்கி ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. துரோணாச்சார்யா பகுதியில் ஆட்டோவை சோதனை நடத்திய போலீஸ் ஆட்டோ டிரைவரின் எண்ணை வாங்கிவிட்டு அனுப்பினார்.

காவல்துறை

ஆனால், மற்றொரு போலீஸ் அதிகாரி ஆட்டோவை நிறுத்தி எங்களை விசாரித்தார். நான் மாஸ்க் அணிந்திருந்ததால் என்னை நடிகை என்று அவர் கண்டுபிடிக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் விசாரித்தது பாதுகாப்பு காரணங்களால் இருக்கலாம், அதை தவறு சொல்லவில்லை. ஆனால், எங்கள் தனிப்பட்ட விபரங்களை அவர் கேட்டதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் எங்களிடம் நீங்கள் உறவினர்களா, எப்படி உறவினர்கள், ஒரே வீட்டில்தான் வசிக்கிறீர்களா என்பதுபோன்று பல கேள்விகளை கேட்டார். அதுமட்டுமல்லாது எங்களை பின் தொடர்ந்து வந்து நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி எந்த ஃபிளாட்டுக்குப் போகிறோம் என்பது வரை அவர் கண்காணித்தார். அவரது கேள்வியின் முறை சரியில்லை என்பதால் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக முகநூலில் பதிவு செய்தேன். மற்றபடி அவர்மீது புகார் அளிக்க வேண்டும் என்பதோ, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல" என்றார்.

Police

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பிஜூ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/bTyHQu8

Post a Comment

0 Comments