ஆளுநர் ரவி: நான் அப்படித்தான் பேசுவேன்... தொடரும் சர்ச்சை பேச்சுகள்! - முழு தொகுப்பு

தமிழக அரசியல் வரலாற்றில் சர்ச்சைக் கருத்துக்களுக்கு பஞ்சமில்லாத ஒரு ஆளுநராக ஆர்.என்.ரவி உருவெடுத்திருக்கிறார். ஆளுநராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், கால்டுவெல், திராவிடம் என அவர் பேசிய சர்ச்சை பேச்சுகள் ஏராளம். தற்போதும்கூட ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம், மசோதா நிலுவை குறித்து சர்ச்சையாகப் பேசி சிக்கியிருக்கிறார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை சட்டைசெய்யாமல் கன்னித்தீவு தொடர்கதைபோல அவர் அள்ளிவீசிவரும் சர்ச்சை பேச்சுகளின் முழுத்தொகுப்பை தலைப்பு வாரியாகப் பார்க்கலாம்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சுகள்

போராட்டம்:

*``வெளிநாடுகளிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் நம் நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு காப்பர் எந்த அளவிற்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப்பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துவிட்டனர்.

*கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும்போது போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கும் வெளிநாட்டு நிதிகளே காரணம்.

*விழிஞம் துறைமுகம் கொண்டு வரக்கூடாது என்ற எதிர்ப்புக்குப் பின்னாலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

*வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.

* `அக்னிபத்' திட்டம் புரட்சிகரமான திட்டம். அக்னிபத் திட்டத்தை தவறான வழிகாட்டுதலில், தவறாகப் புரிந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதி இளைஞர்கள் எதிர்த்து வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்.”

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

திராவிடம்:

* ``பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினர்.

* ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு, விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் பிரித்து அடையாளப்படுத்தி விட்டனர். திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் அடையாளப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான்!

* சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. அது 'டார்வினியன் மாடல்!' சில புத்திகூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள். பிரதமர் மோடியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல்தான் எல்லா அடிப்படைத்தேவைகளையும் எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிக்கிறது!

ஸ்டாலின் - ரவி

* நாம் அனைவரும் மாநில ரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி சமமான வளர்ச்சியை உருவாக்காது. மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்.

* அதிகாரத்திற்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இங்குள்ள கட்சியினர் அரசியல் செய்கின்றனர்; நாட்டு மக்களின் பார்வையை குறுக்கி விட்டனர். தற்போது, திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டும் அல்ல. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது!

* நீட் வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது, தமிழக சட்டப்பேரவை இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

* மற்ற மாநில மாணவர்களைப்போல நம்முடைய தமிழக மாணவர்களும் பிற இந்திய மொழிகளைக் கற்க வழிசெய்யவேண்டும், அதை மறுப்பது சரியல்ல!”

ஸ்டாலின் - ஆர்.என்.ரவி

தமிழ்நாடு:

*``ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நாகரீகமாக நிறுத்திவைப்பு என்கிறோம். நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் பொருள்.

*சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமாக ஆகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஒரு அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்கு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

* தமிழகத்தில் பட்டியலின மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது. இன்னும் பல இடங்களில், பல பள்ளிகள், கோயில்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு

*கோவையில் நடந்தது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல். இந்த பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழித்துதான் தமிழக அரசு என்.ஐ.ஏ-வுக்கு வழக்கை ஒப்படைத்திருக்கிறது. இந்த காலதாமதம் ஏன்?

*கோயம்புத்தூர் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன இடம்!

* பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமைகள், மறுவாழ்வு, மாணவர் சங்கம் எனப் பல முகமூடிகளை அணிந்துகொண்டு அது செயல்பட்டுவருகிறது. இந்தியாவை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒரு பிரச்னை. இதுகுறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புக்கு இதுபோன்ற வெளிநாடுகளில் இருந்தே நிதி வருகிறது.

*துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும்.”

திருக்குறள்:

*``மதபோதகரான ஜி.யு.போப் திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை, பக்தி கண்ணோட்டத்தை நீக்கி பெரிய அவமதிப்பை செய்திருக்கிறார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யூ.போப்பின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது.

*திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பது போல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அது ஒரு இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது.

*முதல் திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி!”

காவி உடையில் திருவள்ளுவர்

சனாதனம்:

*``சனாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலமைப்பு சட்டம், சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது.

*ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது.

*`சனாதன தர்மம்’ என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

ஸ்ரீ ராமாநுஜர் மஹோத்ஸவம் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி

*இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டதாக இருக்கவேண்டும்.

*இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல! உலகின் மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கிறது.

*நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.

*காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்ளைக்கொண்டது. அந்தக் கோட்பாட்டின்படி, 'இல்லாதவர்கள்' மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது.

*நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டிப் பேசுகிறார்கள்."மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது" என்ற ஜனநாயகம் பற்றிப் பேசும்போது ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனைப் புகழ்கிறார்கள். இவையெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.”

ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின்

புதிய கல்வி கொள்கை:

* ``மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது பாரதிதாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணம்.

*ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வுடன் கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம். இதுவரை நாம் தேசத்தைப் பார்த்த பார்வை சரியாக இல்லை; தற்போது இருக்கும் கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும்.

ஆர்.என்.ரவி

* புதிய கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாசாரம், பாரம்பர்யம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெக்க முடியும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச்செல்ல முடியும்.

* புதிய தேசிய கல்விக் கொள்கை கொள்கை என்னவென்று இங்குள்ள அரசியல் தலைவர்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..தயவுசெய்து தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்!”



from India News https://ift.tt/VQOEmrj

Post a Comment

0 Comments