"மோடி அரசின், ஜனநாயகத்தைக் கொல்லும் முயற்சி இது" - தேஜஸ்விக்கு எதிரான சோதனை குறித்து கார்கே காட்டம்

ரயில்வே பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களிடம் நிலத்தை எழுதி வாங்கிய முறைகேடு வழக்கில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரின் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று (10-3-23) அமலாக்கத்துறையினர் டெல்லி மற்றும் பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதோடு பாட்னா, புல்வாரி ஷெரீப், டெல்லி-என்சிஆர், ராஞ்சி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் அவர் மகள்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ க்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. அப்போது ரூ. 53 லட்சம் பணம், அமெரிக்க டாலர் 1,900, சுமார் 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதோடு லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தேஜஸ்வி யாதவ்

இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் வீட்டில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் , "பணமோசடி விசாரணை என்னும் பெயரில் தேஜஸ்வி யாதவின் மனைவி மற்றும் சகோதரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். லாலு பிரசாத் வயதானவர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இருந்தும் கூட மோடி அரசு அவரிடம் மனிதாபிமானம் காட்டவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தைக் கொல்ல மோடி அரசு ஒரு மோசமான முயற்சியை மேற்கொள்கிறது", என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், ``கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடியபோது மோடி அரசின் அமலாக்கத்துறை எங்கு போனது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு தொழிலதிபர் கௌதம் அதானியை குறிப்பிட்டு, "நெருங்கிய நண்பனின் சொத்துமதிப்பு விண்ணை தொட்டப்போதும், விசாரணைகள் ஏன் நடத்தப்படவில்லை?. இந்த சர்வாதிகார போக்கிற்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் " என்றும் பதிவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/zjRqbYL

Post a Comment

0 Comments