பல கட்ட கட்ட போராட்டங்களுக்கு பின்னர், அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். 'ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட பேரியக்கத்தின் 'மூன்றாம் தலைமுறை தலைவன் எடப்பாடியார்' என்று அவரின் அதிதீவிர ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகிறார் எடப்பாடி.
அதேநேரத்தில், ஜெயலலிதா காலத்தில் எடப்பாடியுடன் பயணித்த அதே சீனியர்கள் நிர்வாகிகள்தான் இன்றும் அவருடன் பயணிக்கிறார்கள். இது அவருக்கு ஒருசில இடங்களில் பக்கபலமாக இருந்தாலும், பல நேரங்களில் நெருடலை தருவதாக அமைந்திருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து, தலைமை பொறுப்பில் இருக்கும் நபராக எடப்பாடியால், சீனியர்களுக்கு ஆர்டர் போட முடியவில்லை என்பதே அந்த நெருடல்.
அதன்படிதான், கடந்த 9-ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்திலும், பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள் என்று, நான்காவது முறையாக எடப்பாடி கூறியும், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி திறமையானவரா அல்லது திணறுகிறாரா என்பது குறித்து எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்மிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
"வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி கட்சியை பலப்படுத்தும் பணியில் முழுமூச்சில் இறக்கியிருக்கிறார் எடப்பாடி. முதல்கட்டமாக ஒற்றைத் தலைமையை உறுதி செய்யும், பொதுச் செயலாளர் தேர்தல் மார்ச் இறுதிக்குள் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து, பூத் கமிட்டிக்கு புத்துயிர் கொடுக்க ஆயத்தமாகி வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் தென் மற்றும் வட மாவட்டங்களில் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு முற்றிலும் சிதைந்துவிட்டது. அதை மீட்டெடுக்க தென்மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதுகுறித்து கடந்த 9-ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது. ஆனால், எடப்பாடியின் வேகத்துக்கு சீனியர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அதை வெளிப்படையாகவும் சொல்ல முடியவில்லை. அதேபோல, நாங்கள் எல்லாரும் சேர்ந்து தானே எடப்பாடியை தலைவராக்கினோம் என்ற மனநிலையில் சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை, எடப்பாடியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு, அதை அவர் ரசிக்கவும் இல்லை. தமிழக பா.ஜ.க-வுடனான உரசல் போக்கை, மிக திறமையாக கையாண்ட எடப்பாடி, சீனியர்களை சமாளிக்க முடியாமல் தான் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர், அம்மா தலைமை பொறுப்புக்கு வந்தார். ஆனால், சீனியர்கள் அம்மாவுக்கு தலைமைக்கான உரிய மதிப்பை கொடுக்கவில்லை. அம்மா எடுக்கும் முடிவுக்கு முட்டுக் கட்டையும் போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை கறாராக கையாண்டார் அம்மா. தற்போது தி.மு.க காங்கிரஸ்ஸில் தஞ்சம் ஆகியிருக்கும் பலரும் அம்மா-வால் அப்போது தூக்கியடிக்க பட்டவர்கள்தான்.
அதன்பின்னர், கட்சிக்கு இளம் ரத்தத்தை பாய்ச்சினார். அதனால்தான், இரண்டாம் தலைமுறைக்கான கட்சியாக அ.தி.மு.க உருமாறி, தமிழ்நாட்டில் அசைக்க முடியாத கட்சியாக நிலைபெற்றது. அதேபோல, தற்போது அ.தி.மு.க தலைமைக்கு மூன்றாம் தலைமுறையாக எடப்பாடி வந்துவிட்டார்.
அம்மா பாணியில் கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால், அதை செயல்படுத்த ஒருவித தயக்கமும் அவரிடம் இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு பின்னர், கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, பல ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொள்ளாமல் இருக்கும் மாவட்ட செயலாளார்களை தூக்கியடிக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி. மேலும், அமைப்பு ரீதியாக இருக்கும் 75 மாவட்டங்களை மறுசீரமைக்கும் பணியும் விரைவில் நடைபெறும்." என்றனர் விரிவாக...!
from India News https://ift.tt/AN1uRq2
0 Comments