அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் இடையே மோதல் போக்குகள் தொடரும் இச்சூழலில், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற வேண்டுமென திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவரின் பேச்சின் பின்னணி என்ன? பாஜக அதிமுக பிரிந்தால் அதிமுகவோடு ஐக்கியமாகலாம் என்ற அரசியல் கணக்குகள் இருக்கின்றனவா அல்லது பொதுநலன் சார்ந்து பேசுகிறாரா திருமாவளவன் என்றெல்லாம் அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் பேசுகையில், “திருமாவளவனின் கருத்துக்குப் பின்னால் அக்கறையும் அரசியலும் கலந்தே இருக்கிறது. சனாதன எதிர்ப்பில் மிக உறுதியாக இருக்கிறார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாஜக எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் பாஜகவால் அதிமுக சிதைந்துவிடக் கூடாது என்ற அக்கறையும் ஒருபக்கம் இருக்கிறது. அரசியல் பின்னணியை ஆராய்ந்தால் சமீபத்தில் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டேன் என்றிருக்கிறார். ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணி உடைந்து, பாமக, திமுக பக்கம் வரும் பட்சத்தில் விசிக-விற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுக தானே?
ஆனால் அவர் அதிமுகவோடு இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் தற்போதைய சூழலில் மிகக் குறைவு தான். விசிக அதிமுகவுடன் இணைந்து நிற்பதைக் காட்டிலும் திமுகவோடு இணைந்து நின்றால் மட்டுமே வாக்குகளாக உருமாறும். திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக பொது விஷயங்களைப் பேசாமல் தவிர்ப்பவராக இல்லாமல், பொதுநலன் சார்ந்த கருத்துகளையும் திருமாவளவன் முன்வைக்கிறார். அந்த வகையிலேயே அதிமுக குறித்துப் பேசியிருக்கிறார் என்றே கருதுகிறேன்” என்கிறார்
நம்முடன் பேசிய எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், “அதிமுகவை பாஜக சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் மீது ஏறி சவாரி செய்கிறது, அதிமுக ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் இருக்கக் கூடாது என கட்சிக்குள் புகுந்து மிகப் பெரிய அளவுக்கு வேட்டையாடியது என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதிமுகவுக்கு உள்ளேயே இந்த விமர்சனம் இருக்கிறது. பாஜகவைக் கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனப் பல அதிமுக தலைவர்களே சொல்லியிருக்கிறார்கள். வேறு கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வதற்குத் தான் அதிமுகவினர் அப்படிப் பேசிக் கொள்கிறார்கள் என அதனைக் குறைத்துப் பார்க்க முடியாதல்லவா? அவர்களது நோக்கம் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே. திமுகவே அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது நல்லதல்ல என்றெல்லாம் பேசிவருகின்றனர்
திமுக அதிமுகவோடு கூட்டணி வைக்கவா அவ்வாறு பேசி வருகிறது? ஆகவே ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அந்த உணர்வு இருக்கிறது. அதையே தான் விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் திருமாவளவன் இப்போது அந்த கருத்தைச் சொல்லவில்லை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார். இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதிமுக ஒரு தனித்தன்மையோடு இருக்க வேண்டும், ஒரு திராவிட இயக்க கட்சியாகவே இருக்க வேண்டும், களம் அதிமுக vs திமுக என்றே இருக்க வேண்டும். அந்த இடத்தை அதிமுக இழந்தால் பாஜகவோ சில பிற்போக்கு சக்திகளோ வந்துவிடுவார்கள், அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற பரந்த பார்வையிலிருந்து இந்த கருத்தைக் கூறியுள்ளார். இதனைத் தேர்தல் அணி சேர்தலோடு முடிச்சு போட வேண்டாம்” என்கிறார் ஷா நவாஸ்.
``திமுக அரசு சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில்லை, மக்கள் விரோத போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்பதால் விசிக திமுக கூட்டணியில் நிலைக்க விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதற்கு திருமாவளவனின் பேச்சுகளே சான்று. அதிமுக பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிக வலிமையாக இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வருவதாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கூட்டணி குறித்து நல்ல முடிவை அதிமுகவைத் தலைமையே முடிவு செய்யும்” என்கின்றனர் அதிமுக பிரமுகர்கள் சிலர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் சூழலில், தேர்தல் நெருங்கும்போது காட்சிகள் மாறுவதற்காக வாய்ப்புகள் இருக்கின்றன. திமுக கூட்டணியில் விசிக நிச்சயம் தொடரும் என்பதில் விசிக நிர்வாகிகள் உறுதியாக இருக்கின்றனர், மேலும் பாமக திமுக கூட்டணிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தாலும் பாமகவைக் கூட்டணிக்குள் சேர்த்தால் கூட்டணியில் சிதறல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பாமகவை திமுக இணைத்துக் கொள்ளாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
from India News https://ift.tt/BEd5f4D
0 Comments