ராஜஸ்தானில், புல்வாமா தாக்குதலில் தங்கள் கணவரை இழந்த பெண்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ஐந்து நாள்களுக்கு முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் தொடங்கினர்.
அந்தப் பெண்கள் கடந்த திங்கள்கிழமை (6-3-23) முதல் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் வீட்டுக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ``கருணை அடிப்படையில், எங்கள் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும்படி விதிகளை மாற்றியமைக்க வேண்டும். எங்கள் கிராமங்களில் சாலை வசதி செய்து தரவேண்டும்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக எங்கள் கிராமங்களில் சிலைகளை நிறுவ வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு, மாநில அரசு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கடந்த 9-ம் தேதி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவரின் மனைவியைச் சந்திக்கச் செல்லும் வழியில், போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர் கிரோடி லால் மீனா காயமடைந்தார். ஜெய்ப்பூரில் மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில் இது குறித்து கிரோடி லால் மீனா தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் எனது கட்சியின் ஆதரவாளர்களுடன் சமோத் பாலாஜியைப் பார்க்கச் சென்றிருந்தேன். ஆனால், போலீஸார் என்னைத் தடுத்து நிறுத்தியதோடு துன்புறுத்தினர். அசோக் கெலாட்டின் அரசாங்கம் ஒரு மக்கள் பிரதிநிதியிடம் இப்படி நடந்துகொள்கிறது. நாட்டின் கதாநாயகிகளுடன் நிற்பது இவ்வளவு பெரிய குற்றமா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் ராஜஸ்தான் காவல்துறையின் சித்ரவதையால், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் அந்தப் பதிவில் கூறியிருக்கிறார். அதோடு, "மூளையில் ஏற்கெனவே ஏற்பட்ட பழைய காயம் ஒன்றின் காரணமாக, நான் இப்போதைக்கு இங்கேயே இருக்க வேண்டியிருக்கிறது. கதாநாயகிகளைக் கௌரவிக்கும் வகையில், மார்ச் 11-ம் தேதி காலை 11 மணிக்கு மாநில பா.ஜ.க அலுவலகத்துக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் பதிவிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/LPlWiRq
0 Comments