ஆவின் நிறுவனம் 1 லிட்டர் பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ.35-ம், எருமைப்பாலுக்கு ரூ.42 வீதம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி வருகிறது. அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ. 48 முதல் 50 வரையிலும், எருமைப்பாலுக்கு ரூ. 70 முதல் 80 வரையிலும் வழங்கி வருகின்றன.
தனியார் கொள்முதல் மையங்களில் கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்யப்படுவதால் ஆவினுக்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொடர்ந்து இதேநிலை நீடித்தால் ஆவின் நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்து, நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டரிடம் பேசினோம்.
``ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் ஆகும் 1 லிட்டர் பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ.35-ம், எருமைப்பாலுக்கு ரூ.42-ம் நிர்ணயித்துள்ளனர். ஆனால் பாலின் திடம், எஸ்எஃப் எனப்படும் நிலை கொழுப்புச்சத்து போன்றவற்றை கணக்கிட்டு வாங்கும்போது 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ. 31 முதல் 32ம், எருமைப்பாலுக்கு ரூ. 40 முதல் 41 மட்டுமே கிடைக்கிறது.
தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பசும்பாலை ரூ. 48 முதல் 50க்கும், எருமைப்பாலை ரூ. 70 முதல் 80க்கும் கொள்முதல் செய்கின்றன. கூடுதல் விலை காெடுத்து தனியாரால் கொள்முதல் செய்யும்போது, அரசு நிறுவனமான ஆவினில் இருந்து மட்டும் இவ்வளவு விலை குறைவாக கொள்முதல் செய்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு எப்படி விலை கட்டுபடியாகும்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை... தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து பாலை வாங்கி அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான பன்னீர், பால் பவுடர் போன்றவற்றை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் கூடுதல் லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், ஆவின் நிறுவனம் மட்டும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கூடுதல் விலை கொடுக்க தயங்குவதால் நாளுக்கு நாள் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து வருகிறது. முன்பு தமிழகம் முழுவதும் ஆவினில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முதல் 75 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆனது. தற்போது 23 லட்சம் முதல் 24 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் ஆகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 234 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் இருந்து ஆவின் நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 2.25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆனது. தற்போது 1.45 லட்சம் முதல் 1.46 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் ஆகிறது. தினமும் 500 முதல் 700 லிட்டர் பால் கொள்முதல் குறைந்து வருகிறது. பால் கொள்முதல் குறைவதால் ஆவின் நுகர்வோரும் தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
பெரும்பாலான விவசாயிகளின் உபதொழிலாக பால் உற்பத்தி விளங்கி வருகிறது. மாட்டுக்கு வைக்கக் கூடிய தீவனங்களான பருத்தி, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. 1 கிலோ புண்ணாக்கு ரூ.45 முதல் 50-க்கும், 40 முதல் 45 கிலோ எடையுள்ள தவிடு ரூ.1,800 -க்கும், 50 கிலோ கொண்ட உலர் தீவனங்கள் ரூ.1,200 முதல் 1,300-க்கும் விற்கிறது. இந்த விலைக்கு தீவனங்களை வாங்கி பால் உற்பத்தி செய்து தரும்போது தனியாருக்கும், ஆவினுக்கும் இடையே 1 லிட்டர் பாலுக்கு ரூ.10 முதல் 30 வரையிலும் விலையில் வித்தியாசம் ஏற்படுகிறது.
ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கும் அதிக விலை வித்தியாசம் இருப்பதால், கூட்டுறவு சங்கத்தின் பால் உற்பத்தியாளர்களும் தனியாருக்கு பால் விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால், நாளுக்கு நாள் ஆவினுக்கு பால் ஊற்றுபவர்களின் எண்ணிக்கை குறைஞ்சு போச்சு.
எனவே உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உடனடியாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் வரும் 16ஆம் தேதி வரை தினமும் கருப்புப்பட்டை அணிந்தும், கருப்புக் கொடியேற்றியும் அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம். இதற்கும் செவிசாய்க்காவிட்டால் வரும் 17ஆம் தேதி முதல் தினமும் கறவை மாடுகளுடன் சாலை மறியலிலும், பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
அரசு விரைந்து எங்கள் கோரிக்கையை ஏற்று, பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் வீழ்ச்சிக்கு ஆவின் நிர்வாகம் தான் காரணம். தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் போது, ஆவின் நிறுவனம் மட்டும் தயங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆவினில் நாளுக்கு நாள் பால் கொள்முதல் குறைவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்கு தெரியும். ஆனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் நுகர்வோரிடமும், மக்கள் மத்தியிலும் அவப்பெயர் ஏற்படும் என்று அரசு கருதுகிறது.
from India News https://ift.tt/z9MHk2R
0 Comments