கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே, பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்னை உள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் உள்ள, 865 கிராமத்தை கர்நாடகாவில் இருந்து பிரித்து மகாராஷ்டிராவில் இணைக்கவும்; மகாராஷ்டிராவில் கன்னடம் பேசும் மக்கள் உள்ள, 53 கிராமங்களை கர்நாடகாவில் இணைக்கவும், இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன.
இப்பணிக்காக மகாராஷ்டிராவில் இருந்து அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர், நேற்று காலை, பெல்காம் செல்வதாக அறிவித்தனர். இதனால், முதல்வர் பசவராஜ் பொம்மை, பெல்காமில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, ‘அமைச்சர்கள் பெல்காமில் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள்’ என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் பெல்காம் வரும் தங்கள் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்த நிலையில், அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெல்காம் எல்லையில், கன்னட அமைப்பினர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட இரு லாரிகளின் கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இருமாநில எல்லையில் பதற்றம் பற்றிக்கொண்டதை தொடர்ந்து, போராட்டம் நடத்திய, 720க்கும் மேற்பட்டோரை கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்விளைவாக, சிவசேனா கட்சி தொண்டர்கள் சிலர், மகாராஷ்டிரா புனே அருகேயுள்ள சுவர்கேட் பகுதியில், மூன்று கர்நாடக அரசு பஸ்களில், ‘ஜெய் மகாராஷ்டிரா’ என, கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற ‘ஸ்பிரே பெயிண்ட்’ அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், கோலாப்பூர் சுற்றுப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரச்னை பூதாகரமானதை தொடர்ந்து, ‘எங்கள் பஸ்களுக்கு கர்நாடகாவில் பாதுகாப்பு கிடைக்காது என்பதால், மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது,’ என, மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சிவசேனா, காங்கிரஸ் உள்பட அம்மாநிலத்தில் பெரும்பாலானா கட்சியினர், ‘கர்நாடக எல்லையிலுள்ள கிராமங்களை இணைத்து மகாராஷ்டிரா அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும்,’’ என, தொடர்ந்து ஆக்ரோஷமான கருத்துக்களை பதிவிட்டு வருவதால், இருமாநில எல்லைப்பகுதிகளில் பதற்றம் காட்டுத்தீ போல பரவியுள்ளது.
பொறுமைக்கு எல்லையுண்டு!
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் நிருபர்களிடம், ‘‘மாநில எல்லையில், மகாராஷ்டிரா வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதல்கள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அவரின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது என கண்டறிந்தால், நாட்டின் ஒருமைப்பாடு குலையும் அதற்கு கர்நாடக முதல்வர் தான் பொறுப்பு.
அம்பேத்கரின் நினைவு நாளான இன்று மாநில எல்லையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு பிரச்னையில் தலையிட்டு விரைவில் சுமூகமான முடிவை எடுக்க வேண்டும். நாங்கள் மிக பொறுமையாக இருக்கிறோம், எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு,’’ என காட்டமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு’ என்ற கருத்துடன் மாநிலங்களை ஒன்றாக இணைக்கும் வகையில், மோடி தலைமையிலான பாஜக அரசு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிடையே, மோதல் போக்கு நிலவி வருவதை, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/RjPBuUG
0 Comments