லாட்வியா நாட்டைச்சேர்ந்த 40 வயதான பெண் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த போத்தன்கோட்டில் மன அழுத்த நோய்க்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி கோவளத்தில் நடைப்பயிற்சிக்காக சென்ற அவர் காணாமல் போனார். அவரைக் கண்டுபிடிக்கக்கோரி அவரின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அதில், சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு வாழமுட்டம் பகுதியில் மாங்குரோவ் காட்டுக்குள் அந்தப் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தலை தனியாக, உடல் தனியாக அழுகிய நிலையில் இருந்த அந்த உடல் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணை கோவளத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக போலியாக வலம் வந்த உமேஷ், உதயகுமார் ஆகியோர் ஆட்டோவில் புதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பின்பு கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, காட்டுக்கொடியில் கட்டி தூக்கியது தெரியவந்தது.
உமேஷ், உதயகுமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு திருவனந்தபுரம் ஒன்றாம் அடிஷனல் செசன்ஸ் நீதிமன்றத்தில் சுமார் நான்கரை ஆண்டுகளாக நடந்துவந்தது. கடந்த 2-ம் தேதி உமேஷ், உதயகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என கடந்த நீதிபதி கெ.சனில்குமார் தீர்ப்பு கூறினார். அதன் பின்னர் கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடந்தது. அப்போது இந்த குற்றத்துக்கு தூக்குகயிறுதான் தண்டனை என்பது தெரியுமா என நீதிமன்றம் குற்றவாளிகளை பாத்து கேட்டது. அதற்கு அவர்கள் `எங்களுக்கு 26, 28 வயதே ஆவதால் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட உமேஷ், உதயகுமார் ஆகியோருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி தண்டனை அறிவிக்க தொடங்கியதும் குற்றவாளி கூண்டில் நின்ற உமேஷ், உதயகுமார் ஆகியோர், "நாங்கள் நிரபராதிகள். சம்பவ இடத்தில் ஒரு யோகா மாஸ்டர் ஒடிச்செல்வதை பார்த்தோம். அந்த யோகா மாஸ்டருக்கு பல மொழிகள் தெரியும். அவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட முடியை ஆய்வகத்தில் பரிசோதிக்க வேண்டும்" என சத்தமாகக் கூறினர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால் குற்றவாளிகள் கூறியதை நீதிபதி கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், உமேஷ், உதயகுமார் ஆகியோருக்கும் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டணை மற்றும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகை கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சகோதரிக்கு வழங்கவேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/76ANGZK
0 Comments